அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Saturday, April 12, 2014

ஊடக அறத்தைக் கற்பழிக்கும் ஊடகங்கள் - திட்டமிட்டு முடக்கப்படும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி





மான் கராத்தே இரவுக்காட்சி சென்றிருந்தேன். படம் அருமை.
என்னவென்றே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் மீது ஊடகங்கள் பொறிந்து தள்ளின.
சிவகார்த்திகேயன் யாரையும் சட்டைசெய்வதில்லை.
எவரையும் மதிக்காமல் நடந்துகொள்கிறார்.
மான் கராத்தே படம் சொதப்பல்.
வந்த இரண்டே நாட்களில் வெற்றி விழா கொண்டாடிவிட்டார்கள்.
ஆனால், வசூலாகவில்லை.
எல்லா திரையரங்குகளிலும் படத்தைத் தூக்கிவிட்டு,
நான் சிவப்பு மனிதன் - விஷால் படத்தைத் திரையிடுகிறார்கள்.
படத்திற்கு வெற்றி விழா கண்டது பொருளற்றுப்போனது.
படம் வசூல் இல்லை.
என்று ஏகத்துக்கும் மீடியாக்கள் அலறுகின்றன.
இந்தியாவின் வெகுசன ஊடகங்களின் கருத்துக்கள் என்றுமே பொய்யானதாகத்தான் இருக்கின்றன.
இவர்களாக யாரையாவது தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களுக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்று திறமையே இல்லாதவர்களை
ஏதோ ஒரு நல்லகாரியம் செய்துவிட்டாரென்று
ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவார்கள்.
திடீரென்று என்ன வருமோ தெரியாது... வளர்ந்து வரும் முயற்சியாளர்கள்
ஓரிரு வெற்றி கண்டவுடன் வளர்ச்சி பிடிக்காமல்
ஏகத்துக்கும் அளந்து தள்ளுவார்கள்.
இந்த வெட்கங்கெட்ட மூடர்களுக்குத் தேவை பரபரப்பு.
அதற்குப் பின்னால் முடக்கப்படும் உண்மையான திறமையாளர்கள்,
அவர்களின் உழைப்பு, அபார முயற்சி.. என்று எதைப் பற்றியுமே
இந்த மனிதமற்றவர்கள் கவலை கொள்வதே இல்லை.
ஒருவனை விமர்சித்து விமர்சித்தே அவனை இல்லாதவனாய் மாற்றி
வியாபாரப் பரபரப்புக்காக கூசாமல் பொய் எழுதிப் பழகிப்போனார்கள்.
நடிகர் மோகன் தொடங்கி இன்றைய ஆம்ஆத்மி கெஜ்ரிவால் வரை இவர்களின் சூத்திரம் இது தான்.
தெரிய வேண்டிய உண்மைகளை ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்தார் போல புறக்கணிப்பார்கள். இருட்டடிப்பு செய்வார்கள்.
மாணவர்கள் போராட்டம் முதல் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வரை நடைபெறும் ஊடக நயவஞ்சக அரசியல் இதுதான்.
ஊரைப் பற்ற வைத்து அதில் குளிர்காய்கிற அயோக்கியர்களின் ஊடகங்களாய் (ஒரு சில தவிர) இவைகள் இருப்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.
ஊழல்களை மறைப்பது, ஒரே நேரத்தில் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி திரும்பத் திரும்ப நையாண்டி செய்தே அவரின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்துவது,
நாட்டுக்காகப் போராடினவர்களை ஏதோ ஒரு மூளையில் சிறிய கட்டத்தில் பத்தோடு பதினொன்றாகச் செய்திப்படுத்துவது,
நடிகர் நடிகைகள் அந்தரங்கங்களை வெகுசன பரபரப்புக்குள்ளாகும் விதத்தில் முகம்சுளிக்கும் அளவுக்கு விமர்சிப்பது,
என்று இவர்களின் அட்டூழியத்துக்கு பாழாகிப்போனவர்கள் எக்கச்சக்கமானவர்கள்.
என்றுமே ஏமாளியாய் அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி
விவாதித்து, விமர்சித்து, சண்டைபோட்டு அடித்துக்கொண்டு, உணர்ச்சிவயத்திற்குள்ளாகி வீணாய்ப்போகிறவர்கள் மக்கள் தான்.
சிவகார்த்திகேயனையும், விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டு பக்கம் பக்கமாய் கட்டுரை வடித்தார்கள்.
விஜய் சேதுபதியே அப்படி ஒன்றும் இல்லை. இங்கே பல திறமையாளர்கள் இருக்கிறார்கள். மறுபடியும் யாரோ இருவரை மட்டும்
புகழ்ந்தும், இகழ்ந்தும் செய்தி வெளியிடுவதை விட்டுவிட்டு எல்லோரைப் பற்றியும் எழுதுங்கள் என்று மனம் திறந்து சொன்ன போதும்
இவர்கள் திருந்தவே இல்லை. காரணம் அப்படியெல்லாம் திருந்திவிட்டால் இவர்கள் கல்லா கட்ட முடியாதே...
இவர்களின் எண்ணம் போலவே...
விஜய் சேதுபதிக்கு என்று ஒரு சாரார் திரள ஆரம்பித்து சிவகார்த்திகேயனை வசைமொழியத் துவங்கினார்கள்.
சிவகார்த்திகேயனை ஆதரிப்பவர்கள் விஜய் சேதுபதியை வசைமொழியத்துவங்கினார்கள்.
வியாபாரமானது. கல்லா கட்டினார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் படங்கள் மிதமான வெற்றியைத் தர,
சிவகார்த்திகேயனின் வெகுசன வெற்றி இவர்களைத் திக்குமுக்காடச் செய்தது.
காழ்ப்புணர்வு பீடித்த பேனாவை வழக்கம் போல விளம்பரம் தேடப் பயன்படுத்தத் துவங்கியவர்கள்...
சிவகார்த்திகேயனை கிழி... கிழி... கிழி... அவதூறு மேல் அவதூறு...
அதில் எதுவுமே நம்பும்படியாக இல்லை...
சிவகார்த்திகேயனே பல நேரங்களில் விஜய் டிவியில் விளக்கம் சொல்ல நேர்ந்தது.
பிறகு ஒரு நேரத்தில் அதை நிறுத்திக்கொண்டு பட வேளைகளில் மும்முரமானவருக்கு அடுத்தடுத்து முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வுகள் நிகழத்துவங்கின. திரைச் சந்தையில் விஜய், அஜித், சூர்யா இவர்களுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் தான் வசூலில் சாதனை படைத்திருக்கிறார் என்ற செய்தி அவரின் சந்தை மதிப்பை உயர்த்திக்காட்டியது. மான் கராத்தே - படம். ஹன்சிகா ஜோடி என்றதும் பரபரப்புக்கள் பற்றிக்கொள்ளத் துவங்கின. திரைநாயகிகளை பகடைகளாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களின் பணத்தில் படமெடுத்து, பிறகு கைவிட்டுவிடுவதில் கில்லாடியான சிலம்பரசன் - தனுஷ் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயனுக்கு சொடி என்றதும் ஹன்சிகாவின் காதலை முறித்துக்கொண்டார் என்ற செய்தியில் பக்கம்பக்கமாக வலைபூ எழுத்தாளர்கள் வரை அலறத்துடித்தார்கள். சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட் பெருநாயகர்களின் படங்களுக்கு இணையாக செலவிடப்படுவதில் துவங்கி, படத்திற்கு அதிக அளவிலான பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதுவரை அத்தனையும் சாதனை செய்திகளாகவே இருந்தது சிவகார்த்திகேயனுக்கு. வளர்ச்சி முகத்தில் கொடிகட்டிப் பறந்த சிவகார்த்திகேயன் நோக்கி இவர்கள் எழுதிய எல்லாப் புரளிகளுக்கும் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட வளர்ச்சிக் காரணிகள் சம்மட்டி அடி கொடுத்தன.
சில தமிழ் ஆர்வலர்கள் படத்தில் திருக்குறளை கேலி செய்திருக்கிறார்கள் என்று கூவினார்கள். அதை இந்தப்படத்தில் மட்டுமா செய்தார்கள். தமிழை எல்லாப் படங்களிலும் கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் தன்னைத் தமிழார்வளனாய் காட்டிக்கொண்டு, சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைத் தடுப்பதாகவே இருக்கிறது. தமிழ் கேலிப்பொருளாகும் எல்லா இடங்களிலும் இவர்கள் எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருப்பதால் இதைச் சொல்லி படத்தை முடக்கவேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் தமிழார்வலர்களாக இருந்தால் - தமிழ் சீரழிக்கப்படும் அத்தனை சங்கதிகளுக்காகவும் இவர்கள் குரல் கொடுத்து அப்படியானவற்றை முடக்கிக்காட்டியவர்களாக இருக்க வேண்டும். பிறகு மான் கராத்தே படத்தை திரையிடுவதை நிறுத்தலாம். இவர்களைப் போன்ற போலிகளால் உண்மையான தமிழார்வலர்கள் கூட ஐயப்பாட்டுக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள்.
ஒரு சிறுவன் ஒரு வெகுசன தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருந்து மக்களைப் பரவச வெள்ளத்தில் ஆழ்த்திக்காட்டியிருக்கிறார். அத்தனை நிகழ்ச்சிகளும் சிவகார்த்திகேயன் என்ற ஒற்றை மனிதனுக்காகவே மக்களால் ரசிக்கப்பட்டது. அவரின் துடுக்குத்தனமான பேச்சுக்களுக்காகவே அத்தனை நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் பன்மடங்கு கூடி பிரபலமடைந்தது. தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளராக வருவதற்கு ஒரு சிறுவனால் இயலுமென்றால் அது அந்தச் சிறுவனின் ஆகப்பெரும் உழைப்பு. உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர் முதல் நேற்று முளைத்த மொக்கை ஹீரோக்கள் வரை அனைவரும் சொல்லிக்கொண்டார்கள். உண்மையிலேயே 'உங்கள் வீட்டுப் பிள்ளை' - என்கிற வாசகம் பொருந்துமென்றால் அது சிவகார்த்திகேயனின் மாயாஜாலமல்ல. அவரின் சமயோசித புத்தியும், நேரத்திற்கு அடிக்கும் நகைச்சுவை நையாண்டிகளும் தான். இத்தனை சாதுர்யமாக ஒரு இளைஞன் மக்களை வயிறு வலிக்கச் சிரிக்கவைத்தால் யாருக்குத் தான் இவரைப் பிடிக்காமல் இருக்கும்.... இந்த வெற்றி முழுக்க முழுக்க சிவகார்த்திகேயனின் சொத்து. அவரது திறமைக்குக் கிடைத்த பலன். திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கோடானுகோடி ரசிகர்களின் இதயங்களை வென்றெடுத்தவன் அந்த இளைஞன் - சிவகார்த்திகேயன். திறமை அவன் ரத்தத்தில் இருப்பதால் எத்தகைய எதிர்வீச்சையும் மக்களின் அபிமானத்தால் இந்த மனிதனால் வென்றெடுக்க முடியும்.
சிவகார்த்திகேயன் பக்கம் இருக்கும் நியாயத்தையும், அவரின் திறமையையும் எடுத்துக்கூறுவதற்காக இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை... அதையும் தாண்டி இந்திய ஊடகங்களின் போக்கு எத்தகைய பாதகமான சூழலில் மக்களை வைத்திருக்க முயல்கின்றன என்பதையும், மக்களை எப்போதும் பதற்றமுள்ளவர்களாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் நயவஞ்சகமான சூழ்ச்சி அரசியலையும் சாடவே எழுதப்பட்டது. இதுபோன்ற அபாண்டமான விமர்சனங்களால் இந்தியஊடகங்கள் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் சிதைக்கிறார்கள். பல இளைஞர்களின் பெருமுயற்சிகளை நசுக்குகிறார்கள். இவர்கள் நிகழும் அரசியல் சூழ்ச்சிகளை இத்தகைய மாற்று விமர்சனப் போக்கால் வெளிப்படுத்தவிடாமல் மட்டுப்டுத்துவதோடு, திசைதிருப்பி மக்களின் அரசியல் எண்ணங்களை மலுங்கடிக்க சிவகார்த்திகேயன் போன்றவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அசுர நஞ்சாற்றில் சிக்கி சின்னாபின்னமாகிறவர்கள் உண்டு. சிலர் அதில் தப்பிப் பிழைக்கிறார்கள். சிலர் திறமையிருந்தும் இவர்களை எதிர்கொள்ள முடியாமல் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்டுகிறார்கள். நிகழ்ந்த பல சம்பவங்களைப் போலவே மொத்த வெகுசன ஊடகங்களாலும் வியாபாரத்திற்க்காகச் செய்யப்பட்ட பரபரப்பில் ஒரு சிறு பகுதி தான் சிவகார்த்திகேயன் என்கிற இளைஞனின் மீதான ஊடகங்களின் ஒட்டுமொத்தத் தூற்றல்,
ஊடகங்கள் நினைத்தால் எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்கிற திமிர் இவர்களுக்கு நல்லதல்ல. அதை கெட்டவர்களிடம் காண்பித்தால் மக்கள் பயனடைவார்கள். கூடங்குளம் முதல் மீத்தேன் குழாய்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனைவரை அனைத்து மக்கள் நலன் சார்ந்த சங்கதிகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, இதுபோன்ற கேளிக்கை செய்திகளைப் பரப்பி மக்களை திசைதிருப்பும் மலிவான அரசியலை முன்னெடுக்கும் ஊடக அராசகம் நிகழ்கிறது. நல்லவர்களைக் கூட ஊடகப் பரபரப்புக்காக நடுத்தெருவில் இவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். புரளி சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் பேரரரசியல் சூழ்ச்சிகளை புலப்படுத்துவதே இல்லை. பன்னாட்டு வணிகத்திலிருந்து, விளைநிலங்களாகும் விவசாயம் வரை இவர்களால் சொல்லத் தகுந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதே கிடையாது. பெரும்பாலும் இந்த நயவஞ்சகத்தை மக்களின் மீதே திணிக்கிறார்கள்.
வெகுசன ஊடகங்களுக்கு பணம் கரந்துவிட்டால் போதும்... அரசியல் கட்சிகளை நோக்கி அவர்களின் பேனா முனை திரும்பிவிடுகிறது. காசுகொடுக்கும் கட்சிகளுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். எத்தகைய நேர்மையானவர்களையும் இவர்கள் ஈவிறக்கமின்றி காவுவாங்குவார்கள். கேலிக்கைச் சித்திரம் என்ற பெயரிலும், நையாண்டி என்கிற பெயரிலும் அவர்களின் புகழை இழிவுபடுத்தி நாசமாக்குவார்கள். இவர்களின் கொடுக்கைப் பிடுங்கி எறிய வேண்டும். நல்ல நோக்கமுள்ள செய்தியாளர்கள் பிறக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ஒரு ஊடக அறம் இருந்தது.
ஊடகத்திற்கு என்று ஒரு கொள்கை இருக்கும்.
அதைத் தலையங்கத்தில் மட்டுமே வெளிப்படுத்தும் அந்த ஊடகம்.
மற்றபடி கொள்கைக்கு மாற்றாக இருந்தாலும் அந்தச் செய்தி திரிக்கப்படாமல் வெளியிடப்படும்.
செய்திகளைச் செய்திகளாகவும் - தலையங்கத்தில் கொள்கையையும் வைத்து நடுநிலைமையோடு வெளிவந்த நாளிதழ்கள் இருந்தன.
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வெள்ளைக்காரர்களையும், ஆட்சியாளர்களையும் பகைத்துக்கொண்டு சுதேசமித்திரன், நம்நாடு இதழ்கள் வெளிவந்த காலம் உண்டு.
இதனால் பல ஆசிரியர்கள் தலைமறைவாக இருந்து செய்தி சேகரித்தார்கள். பல இடங்களில் இதழ்கள் மறைமுகமாக விற்கப்பட்டன. பல எழுத்தாளர்களும், நேர்மையான ஊடகவியலாளர்களும் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாகி ஏதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று மாண்டிருக்கிறார்கள். லாபநோக்கமின்றி கொள்கைக்காகவே இயங்கிய வைராக்கியமுள்ள இதழ்கள் வெளிவந்து அரசியல் புரட்சிகள் நிகழ்ந்த வரலாறு உண்டு.
இப்போது இதற்கெல்லாம் நேர்மாறாகவே இந்தியாவின் ஊடக உலகம் அலறுகிறது.
ஊடக அறம் பலாத்காரம் செய்யப்படுகிறது. இது தேசத்திற்கு நலம் சேர்ப்பதல்ல. மாறாக நாட்டையே துண்டுதுண்டாக்கும்.
மக்களை வெள்ளந்திரிகளாக வைத்திருக்கும். புதிய அரசியலை முடக்கும். புரட்சிகளை மட்டுப்படுத்தும்.
சமூக சிந்தனையாளர்களைச் சந்தியில் நிறுத்தும்.
மனிதநேயத்திற்குப் பாடுபடுபவர்களின் முகத்தில் காசுக்காகச் சேற்றை வாரிப் பூசும்.
மனிதத்தைக் கொன்று, அறத்தைக் கொன்று, அன்பின் ஆணிவேரையே அறுத்தெறியும் நஞ்சை நிரப்பி கட்டுரை வடிக்கும் பேனா முனைகளால் நாம் பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் காவுவாங்கப்படுவோம்.
என்ன செய்யப்போகிறோம்...?


ஊடகத்திமிருக்கு எதிரான ஆற்றான்மையுடன்,
- தமிழ் வசந்தன்