அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Thursday, June 5, 2014

கோச்சடையான் - வரவேற்க்கப்படவேண்டிய உலகத் தமிழ்ப்படம்

தமிழில் ஒரு புதிய முயற்சி செய்வதற்கு எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அதைத் தடுப்பவர்களும், பரிகாசிப்பவர்களும் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது.
கோச்சடையான் - யோசித்துப் பார்த்தால் எத்தனைத் தடைக்கற்களைத் தாண்டி வெள்ளித்திரையில் தாண்டவமாடியிருக்கிறது. அதை உருவாக்க எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கக் கூடும் என்று நினைத்துவிட்டால் அதுவே நம்மை பிரமிக்க வைத்துவிடும். ஆனால், எத்தனை விதமான பிரச்சனைகளை சந்தித்து இப்படம் வெள்ளித்திரையைத் தொட்டிருக்கிறது... என்பது தான் இங்கே விவாதத்திற்குள்ளாகும் கேள்வி... தமிழில் வரலாறை ஒரு திரைப்படம் செய்யுமானால், அதன் தரம் குறைந்ததாகவே இருந்தாலும், நாம் வரவேற்று கொண்டாடுபவர்களாய் இருத்தல் வேண்டும். இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களாகவாவது இருக்க வேண்டும். ஆனால், புதிய முயற்சி வெள்ளித்திரையைத் தொடுவதற்குள்ளாகவே ஆயிரமாயிரம் பிரச்சனைகள். சகித்துக்கொள்ள இயலாத அளவு எதிரமறை யூகங்கள். படம் வெளியாவதற்கு முன்னரே சில மொக்கை தீர்க்கதரிசிகளின் பரிகாச பரிபாலனங்கள். ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட இதன் முக்கியத்துவத்தை முழுதாக உணராமல், மேம்போக்காகவே பார்த்தார்கள் என்பது தான் வருந்தத்தக்க சங்கதி. இத்தனைக்கும் படம் எந்தவிதத்திலும் கொஞ்சமும் தரம்குறைந்ததாக உருவாக்கப்படவே இல்லை. அதையும் தாண்டி விமர்சனங்கள் இருக்குமானால் அவ்வாறான சங்கதிகளிலெல்லாம் ஆகப்பெரும் அளவு ஓட்டை கொண்ட படங்களையெல்லாம் வெள்ளித்திரையில் ஓகோ... ஓகோ... என்று ஓட வைத்தவர்கள் நாம் தான் என்பதையும் மறந்துவிடவே கூடாது.
ஏதோ நாம் ஹாலிவுட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களைப் போலவும், இதுவெல்லாம் ஓரு பெரிய சங்கதியே இல்லை என்பது போலவும் பாவலா காட்டுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை இந்த பாழாய்ப்போன பகட்டு விமர்சகர்களுக்கு. படத்தின் நியாயமான விமர்சனங்கள் உண்டு. ஆனால், இது எந்தவித்திலும் சமரசம் செய்யாமல் செய்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு உருவாக்கப்பட்ட படம். எந்தவிதத்திலும் தரத்தில் சமரசம் நடந்துவிடக்கூடாது என்ற வேட்கையோடு கூர்தீட்டப்பட்ட படம். அதனால், இருக்கும் அந்தச் சில விமர்சனங்களையும் நாம் பொறுத்துக்கொண்டு இப்படத்தை வெற்றிபெற வைத்தாக வேண்டும். காரணம் கதை நியதியே (Logic) கடுகளவுக்கும் இல்லாத படங்களை எல்லாம் நாம் சிலவர் ஜூப்ளிக்கு அனுப்பி வைத்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ரஜினி பெண் சௌந்தர்யா... அதனால் தான் இதையெல்லாம் செய்ய முடிகிறது... என்று பழியை சௌந்தர்யா ரஜினிகாந்தின் உழைப்பின் மீது சுமத்துவீர்களானால் உங்களை உழைப்பின் தேவன் மன்னிக்கக்கடவாராக... ரஜினியால் ஏ.ஆர்.ரகுமான் கிடைக்கலாம்.... வைரமுத்து கிடைக்கலாம்.... ரசூல் பூக்குட்டி கிடைக்கலாம்... கே.எஸ்.ரவிக்குமார் கிடைக்கலாம்... ஆனால், கோச்சடையான் - என்கிற படைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.
சரி... ரஜினி, ரகுமான், வைரமுத்து, ரவிக்குமார் - இவர்கள் அத்தனை பேரையும் நாம் கொடுப்போம்... இவர்களைக் கொண்டு மிகச்சிறந்த - அல்லது உங்கள் கூற்றுப்படி தரங்குறைந்த - இந்தக் கோச்சடையான் போன்றதொரு படைப்பை மட்டுமாவது சமரமின்றி கொடுத்துவிடத் துணிந்த அனிமேசன் நிறுவனங்கள் இங்கே எத்தனை.... இவர்களில் எவரும் சாதாரண வெற்றியாளர்கள் இல்லை... இவர்களைப் பயன்படுத்தி இந்த அளவாவது சாதனை செய்துவிடத் துணிவுள்ளவர்கள் எத்தனை பேர்... முழுதும் இல்லை என்று சொல்ல மறுத்துவிட முடியாது என்றாலும், அவர்களெல்லாம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்கள் தான் என்பதையும், அதிலும் இவ்வளவு தரமாக, இரண்டரை மணிநேர முழு மன்னர் காலத்துத் திரைப்படத்தை எடுத்து பின்வாங்காமல் இறுதிவரை முயன்று முடிக்க வல்லவராக இருப்பவர்கள் மிக மிக மிகக் குறைவு தான் என்பதையும் நாம் கடுகளவு கூட மறுக்க முடியாது. இதற்கான சாத்தியக்கூறு நூற்றில் இரண்டு கூட கிடையாது. அந்த இரண்டில் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோஸூம் ஒன்று!
ஆனால், கோச்சடையான் படம் வெளிவந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திரையரங்கில் கூட்டம் குறைந்த பாடில்லை என்கிற ஒன்று படத்திற்கான வெற்றியை உறுதிசெய்திருந்தாலும், மிகப்பெரிய வியப்பூட்டும்படியாக இப்படத்தைக் கொண்டாடாமல் இருந்துவிட்டது தமிழர்களாக நாம் செய்த குறை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
விகடன் விமர்சனத்தில் 43 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதலாம் போல. விகடனில் முதன்முதலாக இத்தனை ஓட்டைகள் உள்ள ஒரு விமர்சனத்தை இப்போது தான் பார்க்க முடிகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு துவங்கும் விமர்சனம்... அடுத்தடுத்து சொல்வதெல்லாம் நியதிக்குட்படாத (Logic) மொக்கைத் தகவல்கள். ரஜினியின் நடிப்பையும், தீபிகாவின் அழகையும் பாராட்ட முடியாதாம் ஏனென்றால் அவர்கள் நடிக்கவில்லை... அவர்கள் நடிப்பை அனிமேஷன் பொறியாளர்கள் தான் பதிவுசெய்திருக்கிறார்கள் என்கிறார்கள். இது சலனப்பதிவாக்க நுட்பத்தில் வெளிவந்த திரைப்படம் என்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள் போல... இப்படத்தில் பொம்மைகளை வரைகலைஞர்கள் அனிமேஷன் செய்யவில்லை - உண்மையாக நடிக்க வைத்து அதன் தகவலின் அடிப்படையிலேயே அனிமேஷன் கதாபாத்திரங்கள் உதட்டசைவு, கண்ணசைவு, இடுப்பசைவு, விரலசைவு ஏன் போர்க்களத்தில் போர் புரிபவர்களின் தொடை, வாள்வீசும் கரங்கள் உட்பட சூழலுக்கேற்ப உணர்வுகளைக் கொட்டுகின்றன என்பது விகடனுக்கு ஏன் விளங்காமல் போனதோ...
இதில் பாடல் காட்சிகள் அதிகம் தான். ஆனால், அது தான் இப்படத்திற்கு அழகே. அத்தனை பாடல்களும் படமாக்கப்பட்ட விதம் அவ்வளவு அருமை. ஒரு விமர்சகர் இதை கொண்டாடியிருக்கவேண்டும் விகடனோ... 'வீல்...' என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ரஜினி, தீபிகா தவிர நாசர், சரத்குமார், ஜாக்கிசெராப், ஆதி ஆகியோரை குரலைக் கொண்டு தான் யூகிக்க வேண்டியிருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். சனங்களே நினைத்தாலும் அவ்வாறாகவெல்லாம் குரலை வைத்து மட்டுமே யூகித்திருக்க முடியாது. காரணம் - இதில் நீங்கள் குறிப்பிட்ட ஜாக்கிசெராப், ஆதி ஆகியோரின் குரலெல்லாம் தமிழக மக்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லை விமர்சகரே... சோட்டாபீமையும், கோச்சடையானையும் நீங்கள் ஒப்பீடு செய்வீர்களானால், உங்களை விட மடத்தனமான விமர்சனத்தை இங்கே எவருமே செய்யமாட்டார்கள். மற்றபடி நீங்கள் சொல்கிற ஒரு சில குறைகள் ஏற்க வேண்டியது தான் என்றாலும், அவையெல்லாம் பெரும்பாலான அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமாக இடம்பெறுகிற அதே கண்ணுக்கு எளிதில் புலப்படாத குறைகள் தான்.
ரஜினியின் மிடுக்கையும், தீபிகாவின் நடனத்தையும், சரத்குமாரின் திருமண நிகழ்வுகளில் மெய்மறக்க வைக்கும் காட்சிகளையும், பிரம்மாண்டமான பிரம்மிப்பூட்டும் போர்க்காட்சிகளையும் அப்படியெல்லாம் போகிற போக்கில் 'பிளாஸ்டிக் எக்ஸ்பிரஸன்கள்' - என்று சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது விகடன் விமர்சகரே...
ஹாலிவுட் திரைப்படத்தோடு ஒப்பிடுபவர்களுக்காக...
உலகின் முதல் சலனப் பதிவாக்கத் தொழில்நுட்பத் திரைப்படம் - போலார் எக்ஸ்பிரஸ் - ஹாலிவுட் படம் தான். ஆனால் கோச்சடையானுக்கு சொல்லப்படும் நியாயமான நியதிக்குட்பட்ட குறைகள் யாவும் பணத்தைக் கொட்டியிறைத்து படமாக்கப்பட்ட இந்த ஹாலிவுட் படத்திற்கும் பொருந்தும்.
சிலர் ஆங்கிலப் படம் அவதாரோடு ஒப்பிடுகிறார்கள். நியதியோடு பாருங்கள். அவதார் சலனப் பதிவாக்கத்தில் உருவான படம் தான். ஆனால், அதற்கான கதை - நிகழ் உலக இயல்புகளுக்கு நடுவே வரைகலை கதாபாத்திரங்கள் உலவும் சூழலுக்கானது. கோச்சடையான் முழுக்க முழுக்க 3D அனிமேஷன் கதைக்களம் கொண்டது. எனவே ஒப்பீடே தவறு தான். இருந்தாலும் மேலும் சில புட்டு... புட்டு... என்னவென்றால்... ஹாலிவுட் கேமரூனுக்கு எத்தனை கோடிகளையும் கொட்டிக்கொடுக்க உலகம் தயார். அவரின் பெரிய கனவை நனவாக்க பெரு முதலீடுகளை கொட்டிக்குவிக்க நிறுவனங்கள் தயார். ஆனால், இங்கே அப்படியா... இங்குள்ளவர்களுக்கும் உலக கனவுகள் உண்டு. ஆனால், நிதி நெருக்கடிக்கு ஆட்பட்டு தான் அவை வரையரைக்குள் வந்துவிடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால், கோச்சடையான் இத்தகைய இக்கட்டில் எத்தனை பெரிய கனவுகளைக் கண்முன் கொண்டுவந்து விரித்து விருந்து படைத்திருக்கிறது என்கிற அருமை நமக்கு நனிவிளங்கும்.
எத்தனை பெரிய திறமையாளர்கள் கிடைத்தாலும், அதைக் கொண்டு கோச்சடையானைப் போன்ற படைப்பை உருவாக்கும் துணிவுள்ளவர்கள் குறைவு என்று முன்பு சொல்லியிருந்தேன். அது எவ்வளவு உண்மையோ... அதே அளவு உண்மை... கேமரூனுக்குக் கிடைத்ததைப் போன்ற பணமுதலைகள் கிடைப்பார்களேயானால் தமிழிலும் அவதாரை விட மிகப்பெரிய அளவில் மாபெரும் கேன்வாஸோடு பிரம்மாண்டங்களை நிகழ்த்திக்காட்டும் துணிவுள்ளவர்கள் உண்டு என்பதும், அதில் சௌந்தர்யா ரஜினி குறிப்பிடத்தக்கவர் என்பதும். காரணம் அந்த நம்பிக்கையை கோச்சடையானக் கொண்டு வென்றெடுத்திருக்கிறார்கள்.
  • உலகில் முதன்முதலாக முழுநீள அனிமேஷன் திரைப்பட கேரக்டர்கள் சுத்தத் தமிழ் பேசுகின்றன.
  • தமிழ் மன்னர்களின் கதையும், வாழ்வியலும், வீரமும் மெய்சிலிர்க்க திரைப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • இனி ரஜினி எந்த நிலையில் இருந்தாலும் அவரின் மிடுக்கு சற்றும் குறையாமல் அவரையே படமாக்க முடியும். காரணம் அவரின் இயல்புகள் பதிவாக்கப்பட்டுவிட்டன.
  • அஜித்துக்குள் ரஜினியின் ஆன்மா புகுந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திப்பார்க்கும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டோம். (இது உதாரணம் மட்டுமே)
  • உலக சினிமாக்களுக்கு சவால் விடும் திறமையாளர்களை கொண்டிருக்கிறோம் என்பதை சரித்திரத்தில் இன்னுமொருமுறை பதிவுசெய்திருக்கிறோம்.
இவையெல்லாம் நாம் வெற்றிக்களிப்போடு கொண்டாடவேண்டிய காரணங்கள்.
தயவு செய்து குழந்தைகளோடு இப்படத்தைத் திரையரங்கில் முடிந்தால் 3D தொழில்நுட்பத்தில் கண்டுகளியுங்கள். பரவசமூட்டும் அனுபவத்தை மெய்சிலிர்க்கப் பெறுங்கள். அனுவத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள். நீங்கள் கொடுக்கும் கட்டணத்திற்கு மனம் நிறைய, நிறைய, பரவசத்தில் மூழ்கடிக்கும் அற்புத் திரைப்படத்தைக் கண்டுகளிப்பீர்கள் என்பது தான் நியாமான உண்மை என்பதால் திரையில் விரியும் மிகப்பிரம்மாண்டமான தமிழுலகம் உங்களுக்கு வியப்பளிக்கக் காத்திருக்கிறது. தவறாமல் சென்று அனுபவித்து மகிழுங்கள். வாழ்த்துக்கள்!
பரவசத்துடன்,
தமிழ் வசந்தன்