அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Sunday, December 4, 2011

வைகையின் வாழ்க்கை

வைகையின் வாழ்க்கை - சோதனைகளை மீறி வந்த வெள்ளத்தின் அழகைக் காட்டியபடி, வைகை நதியின் அவல நிலையை நினைவுகூறும் காட்சி வடிவ ஆதங்கம்

நவம்பர் 26, 2011ல் கரைபுரண்டோடிய வைகை. மதுரைவாசிகள், புலம்பெயர்ந்த மதுரை வாசிகள் மற்றும் வைகையின்பாற் வேட்கை கொண்டவர்களுக்காக... கண்குளிரப் பாருங்கள். ஆசைதீரப் பாருங்கள். இந்த வெள்ளம் இன்னும் எத்தனை நாளைக்கு என்பதை கேட்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

வைகையில் வெள்ளம்...
விரகனூர் மதகணையின் அவலம்...
வைகையின் பிறப்பிடம் மேகமலைக்காட்டில் நடக்கும் அக்கிரமம்...
இன்னும் பல...




வைகை மகன்,
தமிழ் வசந்தன்

இந்தப் பதிவை இடுவதற்கு முன்புவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை: 310

Wednesday, November 9, 2011

ஏழைச் சைவன் எந்த ஹோட்டலுக்குப் போவான்?


ஹோட்டல்களில் இன்று விற்கப்படும் விலையைக் கேட்டால் கடவுளுக்கே அடுக்குமோ என்னமோ. அசைவம் உண்பவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்ளமுடியும். ஆனால், சைவம் உண்பவர்களின் கதி இருக்கிறதே. . . கேட்கவே வேண்டாம்.

இங்கே நான் சைவம் பெரிதா, அசைவம் பெரிதா என்று போட்டி போட விரும்பவில்லை. கடவுள் இருக்கிறது என்று சொல்ல ஒரு கூட்டம் உண்டு. கடவுளை மறுப்பதற்கு ஒரு கூட்டமும் இதே சமூகத்தில் இருக்கிறது. இரண்டு பேருக்கும் தன் கருத்தைச் சொல்லவும், அதைப் பின்பற்றி நடக்கவும் சம உரிமை இருக்கிறது. அதே போல சைவ உணவுமுறையைக் கறாராக்க் கடைபிடிப்பவர்கள், அசைவத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று இருவேறு கூட்டமும் இருக்கிறது. ஆனால், எந்த அளவிற்கு அவர்களுக்கு அவற்றைக் கடைபிடிக்க இந்தச் சமூகம் அனுமதிக்கிறது என்தைத்தான் பார்க்கவேண்டும்.

சைவ உணவிற்கென்று பிரத்தியேகமான ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றிலெல்லாம் சென்று ஒரு ஏழைச் சைவன் உண்ண முடியாது. கோவை ஆனந்தாஸில் மதியச்சாப்பாடு சாப்பிட 65 ரூபாய் செலவு செய்தாக வேண்டும். அதே உக்கடம் சிந்தூரியில் 55 ரூபாய் தயிருடன். காந்திபுரம் கௌரிசங்கர் சைவ உணவகத்தில் தப்பித்தவறி ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு சேல்ஸ் டேக்ஸ் உட்பட 18 ரூபாய் செலவு செய்துவிட்டு வந்தேன். மதுரையில் காபி, டீக்குப் பெயர் போன ஜம்ஜம் ஸீவீட் ஸ்டாலில் இரண்டுமே தேவமிர்தமாய் இருக்கும். வெளியூர்களிலிருந்தெல்லாம் இருந்து இங்கே காஃபி சாப்பிடுவதற்காகவே வந்து போவார்கள். அப்பேர்ப்பட்ட இடத்திலேயே ஒரு காஃபி 10 ரூபாய் தான். ஒரு டீ 8 ரூபாய் தான். இங்கே குடித்த காஃபி அப்படியொன்றும் பிரத்தியேகமான தயாரிப்பு ஒன்றும் கிடையாது. டவராவில் காஃபி டம்பளரை வைத்துப் பரிமாறப்படும் அதே கசக்கும் எப்போதும் போன்ற பொதுவான காஃபி வகையறா தான். இதற்கு எதற்கு 18 ரூபாய்?

நானும் நண்பனும் அன்னபூர்ணாவில் ஒரு பொங்கல், ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு 48 ரூபாய் செலவு செய்துவிட்டிருந்தோம். இவ்வளவு செலவு செய்தும் வெறும் தட்டைக் கழுவி அதில் பொங்கலையும் சாம்பாரையும் ஊற்றிக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தட்டில் வட்ட இலை வைக்கிற வழக்கம் இன்றைய காலத்தில் கையேந்தி பவனில் கூட இருக்கிறது. சில இடங்களில் பேப்பர் வைத்து அதில் பிரிமாறுகிறார்கள். இவ்வளவு செலவு செய்து சாப்பாடாவது சுவையாக இருக்குமா என்றால் அன்னபூர்ணா சாப்பாடு, செலவு செய்கிற பணத்திற்கு திருப்தி தருவதாக இல்லை. காஃபி டம்பளர் அளவுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் தான் அங்கே முப்பது ரூபாய்.

இது கூடப் பரவாயில்லை. தனியொரு மனிதனாக கௌரி சங்கருக்ககுச் சென்று சாப்பிட்டால் நம்மை ஏன் என்று கேட்க ஆளே இருக்காது. வெய்ட்டர் எவரும் என்ன சாப்பிடுகிறீர்கள், என்று ஆர்டர் கேட்க்க் கூட வரமாட்டார்கள். நாம் தான் கூப்பிட்டு விசாரித்து ஆர்டர் தரவேண்டும். இப்பேர்ப்பட்டவர்கள், பில்லைத் தட்டில் வைத்து அதில் கொஞ்சம் சீரகத்தையும் வைத்துக் கொடுத்து டிப்ஸ் கேட்க மட்டும் வந்து விடுவார்கள். அதுவும் பத்து ரூபாயாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மூஞ்சி கோனிவிடுகிறது. அதற்காக அந்த 5 ரூபாய் நாணயத்தை அவர் வேண்டாம் என்று விட்டுவைக்காமல் இல்லை.

மதுரையில் 12 ரூபாய்க்குக் குறைவாக கையேந்தி பவனில் கூட தோசை கிடைப்பதில்லை. பெரிய ஹோட்டல்களில் 18 ரூபாயில் ஆரம்பிக்கிற தோசை விலை, அதிகமாக மக்கள் புழங்கும் ஹோட்டல்களில் 25 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. சரி, இட்லியாவது சாப்பிடலாம் என்றால் 2 இட்லி 14 ரூபாயில் ஆரம்பித்து 20 ரூபாயையும் தாண்டிவிடுமளவு விலை வைக்கிறார்கள். என்ன தான் செய்வான் சைவன்.

எந்தச் சைவ ஹோட்டல்களும் சாமானியனுக்குப் பக்கத்தில் இல்லை. அசைவ முறையைப் பின்பற்றும் கடைகளுக்குச் செல்லவேண்டிய நிர்பந்த்த்தில் நடுத்தர, ஏழைச் சைவ முறையைக் கடைபிடிப்பவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஏனென்றால் சாமானியர்களுக்கான ஹோட்டல்கள் கிடைக்கிற கொஞ்ச வருவாய்க்காக முற்றிலும் சைவ ஹோட்டல்காளாக நடத்த முடியாது. ஆஃப்பாயில், ஆம்லெட், மீன், சிக்கன் குழம்பு இவையெல்லாம் வைத்தாக வேண்டும். சைவத்திற்குத் தனி, அசைவத்திற்குத் தனியென்று பாத்திரங்களைப் பிரித்து உபயோகித்துப் புழங்குவதும் இவர்களால் இயலாது. கிடைக்கிற கொஞ்சம் வருவாயில் இத்தனை செலவு செய்து தொழில் பண்ண முடியாது. சிறு சிறு ஹோட்டல்களில் கோவையில் புரோட்டாவோ, தோசையோ 7 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஓரளவு சுமுகமான விலை தான். ஆனால், அவைகள் அசைவம் புழங்கும் ஹோட்டல்கள். செல் ஃபோனில் பேசிக்கொண்டே புரோட்டா ஆர்டர் செய்தால், கவனிக்கும் முன் சிக்கன் குழம்பை ஊத்திச் சென்றுவிடுவார்கள். பிறகு அதை குப்பையில் போட்டுவிட்டோ அல்லது அதை இலையிலேயே கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டோ தான் உண்ண வேண்டும். சுதந்திரமாக சாப்பிட எண்ணி, இதை கவனிக்காமல் எத்தனையோ முழுச் சைவர்கள் அசைவ ஹோட்டல்களில் இத்தகைய அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்பதெல்லாம் சாதரணமே.

இத்தகைய ஹோட்டல்களில் இட்லியை ஒரு தீண்டத்தகாத பொருளாகவே எண்ணி ஒதுக்கியே விட்டார்கள். ஏனென்றால், 2 இட்லி 6 ரூபாய் என்று விலைப்பட்டியலில் போட்டுவிடுகிறார்கள். வருகிறவர்கள் 5 இட்லி உண்டு விட்டு, வயிறை நிரப்பிக்கொண்டு, தோசையோ, புரோட்டாவோ கேட்பதே இல்லை. அதனால், விலை அதிகமுள்ள சரக்கை விற்க எண்ணி, இட்லியை எப்போதாவது தான் செய்கிறார்கள். அதுவும் ஒரு ஈடோ, இரண்டு ஈடோ. . . அதையும் மறைத்துத் தான் வைத்திருப்பார்கள். யாராவது ஒரு புண்ணியவான் வந்து கேட்டால் மட்டும் தான் எடுத்துக் கொடுக்கிறார்கள். மற்றபடி இத்தகைய ஹோட்டல்களில் இட்லியைச் சுடுவதும் இல்லை. வருகிறவர்கள் இட்லி என்று கேட்பதும் இல்லை. அந்த மரபையே கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துவிட்டார்கள். இப்போது இட்லி வீட்டில் மட்டுமே கிடைக்கும் ஒரு பதார்த்தம். விலை இன்னும் குறைவாகப் போனால் அந்தச் சாப்பாட்டை உண்பதால் பசியாறுமே தவிர எல்லாப் பிணிகளும் வந்து தொலைக்கும். அந்த அளவுக்கு மட்டமான அரிசி, மட்டமான எண்ணெய், முக்காலும் பாமாயிலாகத்தான் இருக்கும்.

எல்லோருக்குமான விலையில் சைவ ஹோட்டல்கள் இனி வர வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கும் பார்பணியர்களை விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் தான் இப்போது அதிகமாக அசைவம் உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே சைவத்தின்பாற் விருப்புகொண்டு அதைக் கடைபிடிக்க விரும்பும் ஒரு பேச்சுலர் ஏழைச் சாமானியன் என்ன தான் செய்வான் ?

ஏழைச் சைவர்களுள் ஒருவன்,
தமிழ் வசந்தன்