அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Wednesday, October 7, 2015

உலகமயமாக்கல் என்ன செய்யும்....10 அண்ணாச்சி கடைகளை முடக்கிவிட்டு....
ஒற்றை super market வருவதால் சமத்துவம் என்ன ஆகும்....

5 திரையரங்குகள் கட்டி ஒற்றை ஆளாய்
நாளுக்கு 3 வேளை 15 காட்சிகள் காட்டி
பணம் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன.....

10 ரூபாய் கூட பெறாத capachino cofee-ஐ
80 ரூபாய்க்கு ஏன் விற்க வேண்டும்....

வேறொரு மாநிலத்தில் திரையரங்கில் குடிதண்ணீர் கொண்டுவருதற்கு தடை விதித்தால்...
நிர்வாகம் சுகாதாரமான தண்ணீர் கட்டணமின்றி வழங்கியாக வேண்டும் என்று கட்டளையிட்டுருக்கிறது நீதிமன்றம்....
ஆனால், இங்கோ....
குழந்தைக்கு புட்டிப்பாலோ... ஏன் ரொட்டித் துண்டோ திரையரங்க வளாகத்துக்குள் இன்று உங்களால் கொண்டு செல்ல முடியுமா....

மதுவின் மயக்கத்தில் நம்மை கட்டிவைத்துவிட்டார்கள்....
நாம் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டோம்....

corporate-களுக்கு இவையெல்லாம் லட்டுப் பண்டங்களைப் போல....
எக்குறையுமின்றி ஆளவட்டம் போடுகிறார்கள்....

முதலாளித்துவத்துக்கு மிகச் சில கூர்மையான உதாரணங்களில் இவையெல்லாம் சில....

இவற்றை வளரவிடுவதால்......

முதலில் உங்கள் தொழில் பறிபோகும்...
பிறகு உங்கள் மொழி பறிபோகும்...
பின் உங்கள் மதம் பலியாகும்...
சொந்தத் தொழிலை corporate தவிர
எவனும் துவங்க முடியாது.

அவன் சொல்வது சட்டமாகும்.
சனநாயகப் போர்வையில் corporate அரசாளும்...

வட்டார வழக்குகள் அழியும்....
உள்நாட்டு வாணிபம் அபகரிக்கப்படும்....
நாகரிகத்தின் தடயங்களைப் புதைப்பார்கள்...

காலங்காலமாக நீங்கள் பண்பென்று போற்றியதை இழிவென்று நகைப்பார்கள்.

உங்கள் கலாசாரத்தை குழிதோண்டிப் புதைத்து
அதன் மேல் களியாட்டம் போடுவார்கள்.

உங்களின் உயர்வான நாகரிகம்
உங்கள் மகனாலே அநாகரிகமென்று நகைக்கப்படும்.

பாசம், பண்பெல்லாம் கடைச்சரக்கு என்றாகும்.
கம்யூனிசத்தை நசுக்குவார்கள்.
சமத்துவத்தை பொசுக்குவார்கள்.

சுயதொழில் அழியும்.
அனைவரும் பணியாளர் (அடிமைகள்) என்ற கலாசாரம் உருவாகும்.
தொழிலாளர் உரிமையெல்லாம் காற்றில் பறக்கும்.

corporate-ன் கொட்டம் உச்சியில் நிலைகொள்ளும்.
மீண்டும் ஒரு தொழிற்புரட்சிக்கு இன்னொரு பிரெடெரிக் ஏங்கல்ஸூம், காரல் மார்க்கஸூம் தேவைப்படுவார்கள்.

இதற்குள் உங்கள் மொழி, மதம், இனம், பண்பாடு, கலாசாரம், நாகரிகம் என்ற சமூகக் கூறுகள் அனைத்தையும் அவன் மாற்றி வைத்திருப்பான்.

நான் மதுரை என்று சொல்லிக்கொள்வதில் எனக்கென்ன வெட்கம்.
நான் திருநெல்வேலி எனச் சொல்லிக்கொள்வதில் எனக்கென்ன அவமானம்.

இங்கே நேர்மையைத் திறமையானவர் மட்டுமே கடைபிடிக்க முடியும். இது ஒரு மோசமான சமூகப் பிழை.
திறமை உண்டோ இல்லையோ.... நேர்மை தவறக்கூடாது. ஆனால்,
திறமையற்றவர் நேர்மையாக இருந்தால் அறிவற்றவர் என்று இகழப்படுகிறார்.
தான் ஏதோ ஒன்றில் திறமையற்றவர் என்ற ஒப்புதலுக்காக மொத்தமாகவே திறமையற்றவர் என்று முத்திரை குத்தி வெளியேற்றப்படுகிறார்.
ஒற்றைக் காரணத்தின் பின் அத்தனை அரசியலையும் செய்து வீழ்த்தி விடுகிறார்கள்.

சமுதாயத்தில் திறமையின்றி நேர்மையாய் இருப்பது என்பது...
போர்க்களத்தில் வாள், கேடயமின்றி வீரனாய் இருப்பதற்கு ஒப்பானது...

வீரனுக்குப் புல்லும் ஆயுதம் தான்....
அரசியல், அதிகார, ஆள் மற்றும் பண பலத்துடன் எதிர்ப்பவன்
புல் கூட கண்ணுக்குப் புலனாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு களமாடுகிறவனாய் இருக்கையில்....
யாதுமற்ற நிராயுதபாணியாய் ஒற்றை வீரத்தை மட்டும் கொண்டு பாவம்.... வீரன் தான் என்ன செய்வான்....

எதிரியின் களத்தில் முதல் அடியை வைக்கும் போதே இரண்டு கால்களையும் தூர இருந்தே துண்டித்துவிடுகிறார்கள்....
அதனாலேயே அனைவரும் பின்வாங்குகிறார்கள்....

எப்படியிருந்தாலும்,
அடிமையாய் இருப்பதை விட வீரனாய் வீழ்வதே மேல்.

ஆனால், இதற்கான தீர்வு....
நேர்மையைத் தவற விடுவதல்ல....
கோழையாய் வாழ்வதில் அல்ல....

வாளும், கேடயமும் பெற்றுக்கொள்வது...
திறமையை வளர்த்துக்கொள்வது....

எரியும் ஈட்டியில்
எதிரியின் நெஞ்சுபிளக்க....
குறிவைக்கும் ஆற்றலை
வென்றெடுப்பது....

இங்கே அம்பினைக் கையிலெடுப்பதை
எதிரி கண்டுகொண்டால்
அங்கே அவனின் குலை நடுங்க வேண்டும்....

மதுவை ஒழியுங்கள்....
சிலிர்தெழுங்கள்...
விழிப்பு கொள்ளுங்கள்....

வாளையும், கேடயத்தையும் நாம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எதிரி செய்யும் சதி தான்
super market மற்றும் multiplex

வீரனாய் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக விரிக்கப்பட்ட வலை தான்
மதுவென்னும் போதை.....

ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் பெருமானமுள்ள
சீப்பையும், சோப்பையும் விற்றுத்தான்
corporate வியாபாரம் செய்ய வேண்டுமா....

corporate வருமானம் தேடிக்கொள்ள ஆயிரம் பெருமுதலீட்டுத் தொழில்கள் உண்டு.....

சமானியன் வாய்ப்பையும் சுரண்டிப்பறித்து பணம் சேர்க்க வேண்டும் என்று corporate-களுக்கு அவசியம் என்ன.....

கொள்ளை கொள்ளையாய் பணம் சேர்க்கும் ஆசை....

அதற்காக எவரின் வாழ்வையும் வேரொடு பிடிங்கி எறிய
ஈவிறக்கமின்றி எதையும் செய்யச் சொல்கிறது....
வாழ்வியல் தடயங்களை வேரோடு அழிக்க முனைகிறது.
மனித ஒழுக்கங்களின் மீது மிருக வேட்டையாடுகிறது...

சாமானியன் தனக்கான பிழைப்புக்கு எங்கே போவான்....
சாலையிலே கடைவிரித்து சொற்பப் பணம் ஈட்டலாம் என்றால்...
super market-ல் அதே பொருளுக்கு ஆயிரம் மடங்கு விலைகொடுப்பவர்கள்....
சாமானியரிடம் அந்தச் சொற்பத் தொகைக்கே பேரம் பேசுகிறார்கள்....

வியிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பல ஆண்டுகள் போராடி சில லட்சங்களைத் சேர்த்து சிறு பலசரக்குக் கடை விரித்தால்....
கோடிகளில் super market-களை நிறுவி 10 சுயதொழில் காரர்களை வேரோடு அழிக்கிறார்கள்....
அங்கே அழிவது 10 வியாபாரிகள் அல்ல... 10 குடும்பங்கள்.... 100 ஜீவன்கள்....

வாய்ப்பிழந்த இளைஞர்களெல்லாம்
வழியிழந்து பசிக்கிறையாகும்
ஒரு நாள் வரும்....

எத்தனை உருண்டு புரண்டாலும்
சகவாழ்வை அடையமுடியாது
என்ற நிலை வரும் போது
தாம் நிர்க்கதிக்காளாக்கப்பட்டதன்
உண்மை புலனாகும்.

வயிறெரியச் சுயத்தை சூரியன் சுடும்போது
வாய்ப்பை அபகரித்துக்கொண்ட கயவர்களின்
உண்மை முகம் கைகொட்டிச் சிரிக்கும்...

காப்பாற்ற வழியின்றி
இறந்த உறவுகளும், இழந்த உறவுகளும்...
மனசாட்சியை உலுக்கும் தருவாயில்...
சூட்சிக்குள் சிக்க வைத்த
சூத்திரதாரியின் பெயர் விரியும்....

அயலான் விட்டெரிந்த
காசைக் கவ்விக்கொண்ட
அரசியல் கட்சிகளெல்லாம்
அடியோடு கவிழ்ந்துபோகும்...
அன்று - Brand-கள் பொடிபொடியாகும்....

அந்நியர் தொழிலகங்கள்
சாமானியர்கள் கரங்களால்
சிதறுண்டுபோகும்...

சொந்த நிலத்தின் வேர்வரை நீர் உறிஞ்சி
கோடிகோடியாய் குளிர்பானம் விற்றவர்கள்
வீதவீதியாய் விரட்டியடிக்கப்படுவார்கள்....

ஒற்றை ரூபாயையும் சாமானியனிடம்
விட்டுவைத்துவிடக்கூடாது என்கிற
கொத்தடிமை சூத்திரத்தின்
அதிபதிகள் அனைவரையும்

பொதுமக்கள் புடைசூழ
போக்கிடம் ஏதுமின்றி
வகையாய் வரிந்துகட்டி
நையப் புடைவார்கள்.

கீழ்வானம் சிவக்கும்....

பூமி எதிர்த்திசையில் சுழலும்....

தனி மனிதன் தன்
சந்தைப்படுத்தும் உரிமையை
மறுபடியும் தனக்கென மீட்டெடுப்பான்.

சொந்த மண்
சொந்த மாந்தர்களுக்கானாதாய் மாறும்...

சமத்துவம் சர்வமும் நிலைகொள்ளும்....

உலகம் தழைக்கும்!

ஊர் விளங்கும்!

ஏழை மகற்கும்
மூவேளை வயிறாரும்!


பசியுற்ற சாமானியன்,
-தமிழ் வசந்தன்

Thursday, June 5, 2014

கோச்சடையான் - வரவேற்க்கப்படவேண்டிய உலகத் தமிழ்ப்படம்

தமிழில் ஒரு புதிய முயற்சி செய்வதற்கு எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அதைத் தடுப்பவர்களும், பரிகாசிப்பவர்களும் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது.
கோச்சடையான் - யோசித்துப் பார்த்தால் எத்தனைத் தடைக்கற்களைத் தாண்டி வெள்ளித்திரையில் தாண்டவமாடியிருக்கிறது. அதை உருவாக்க எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கக் கூடும் என்று நினைத்துவிட்டால் அதுவே நம்மை பிரமிக்க வைத்துவிடும். ஆனால், எத்தனை விதமான பிரச்சனைகளை சந்தித்து இப்படம் வெள்ளித்திரையைத் தொட்டிருக்கிறது... என்பது தான் இங்கே விவாதத்திற்குள்ளாகும் கேள்வி... தமிழில் வரலாறை ஒரு திரைப்படம் செய்யுமானால், அதன் தரம் குறைந்ததாகவே இருந்தாலும், நாம் வரவேற்று கொண்டாடுபவர்களாய் இருத்தல் வேண்டும். இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களாகவாவது இருக்க வேண்டும். ஆனால், புதிய முயற்சி வெள்ளித்திரையைத் தொடுவதற்குள்ளாகவே ஆயிரமாயிரம் பிரச்சனைகள். சகித்துக்கொள்ள இயலாத அளவு எதிரமறை யூகங்கள். படம் வெளியாவதற்கு முன்னரே சில மொக்கை தீர்க்கதரிசிகளின் பரிகாச பரிபாலனங்கள். ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட இதன் முக்கியத்துவத்தை முழுதாக உணராமல், மேம்போக்காகவே பார்த்தார்கள் என்பது தான் வருந்தத்தக்க சங்கதி. இத்தனைக்கும் படம் எந்தவிதத்திலும் கொஞ்சமும் தரம்குறைந்ததாக உருவாக்கப்படவே இல்லை. அதையும் தாண்டி விமர்சனங்கள் இருக்குமானால் அவ்வாறான சங்கதிகளிலெல்லாம் ஆகப்பெரும் அளவு ஓட்டை கொண்ட படங்களையெல்லாம் வெள்ளித்திரையில் ஓகோ... ஓகோ... என்று ஓட வைத்தவர்கள் நாம் தான் என்பதையும் மறந்துவிடவே கூடாது.
ஏதோ நாம் ஹாலிவுட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களைப் போலவும், இதுவெல்லாம் ஓரு பெரிய சங்கதியே இல்லை என்பது போலவும் பாவலா காட்டுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை இந்த பாழாய்ப்போன பகட்டு விமர்சகர்களுக்கு. படத்தின் நியாயமான விமர்சனங்கள் உண்டு. ஆனால், இது எந்தவித்திலும் சமரசம் செய்யாமல் செய்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு உருவாக்கப்பட்ட படம். எந்தவிதத்திலும் தரத்தில் சமரசம் நடந்துவிடக்கூடாது என்ற வேட்கையோடு கூர்தீட்டப்பட்ட படம். அதனால், இருக்கும் அந்தச் சில விமர்சனங்களையும் நாம் பொறுத்துக்கொண்டு இப்படத்தை வெற்றிபெற வைத்தாக வேண்டும். காரணம் கதை நியதியே (Logic) கடுகளவுக்கும் இல்லாத படங்களை எல்லாம் நாம் சிலவர் ஜூப்ளிக்கு அனுப்பி வைத்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ரஜினி பெண் சௌந்தர்யா... அதனால் தான் இதையெல்லாம் செய்ய முடிகிறது... என்று பழியை சௌந்தர்யா ரஜினிகாந்தின் உழைப்பின் மீது சுமத்துவீர்களானால் உங்களை உழைப்பின் தேவன் மன்னிக்கக்கடவாராக... ரஜினியால் ஏ.ஆர்.ரகுமான் கிடைக்கலாம்.... வைரமுத்து கிடைக்கலாம்.... ரசூல் பூக்குட்டி கிடைக்கலாம்... கே.எஸ்.ரவிக்குமார் கிடைக்கலாம்... ஆனால், கோச்சடையான் - என்கிற படைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.
சரி... ரஜினி, ரகுமான், வைரமுத்து, ரவிக்குமார் - இவர்கள் அத்தனை பேரையும் நாம் கொடுப்போம்... இவர்களைக் கொண்டு மிகச்சிறந்த - அல்லது உங்கள் கூற்றுப்படி தரங்குறைந்த - இந்தக் கோச்சடையான் போன்றதொரு படைப்பை மட்டுமாவது சமரமின்றி கொடுத்துவிடத் துணிந்த அனிமேசன் நிறுவனங்கள் இங்கே எத்தனை.... இவர்களில் எவரும் சாதாரண வெற்றியாளர்கள் இல்லை... இவர்களைப் பயன்படுத்தி இந்த அளவாவது சாதனை செய்துவிடத் துணிவுள்ளவர்கள் எத்தனை பேர்... முழுதும் இல்லை என்று சொல்ல மறுத்துவிட முடியாது என்றாலும், அவர்களெல்லாம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்கள் தான் என்பதையும், அதிலும் இவ்வளவு தரமாக, இரண்டரை மணிநேர முழு மன்னர் காலத்துத் திரைப்படத்தை எடுத்து பின்வாங்காமல் இறுதிவரை முயன்று முடிக்க வல்லவராக இருப்பவர்கள் மிக மிக மிகக் குறைவு தான் என்பதையும் நாம் கடுகளவு கூட மறுக்க முடியாது. இதற்கான சாத்தியக்கூறு நூற்றில் இரண்டு கூட கிடையாது. அந்த இரண்டில் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோஸூம் ஒன்று!
ஆனால், கோச்சடையான் படம் வெளிவந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திரையரங்கில் கூட்டம் குறைந்த பாடில்லை என்கிற ஒன்று படத்திற்கான வெற்றியை உறுதிசெய்திருந்தாலும், மிகப்பெரிய வியப்பூட்டும்படியாக இப்படத்தைக் கொண்டாடாமல் இருந்துவிட்டது தமிழர்களாக நாம் செய்த குறை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
விகடன் விமர்சனத்தில் 43 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதலாம் போல. விகடனில் முதன்முதலாக இத்தனை ஓட்டைகள் உள்ள ஒரு விமர்சனத்தை இப்போது தான் பார்க்க முடிகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு துவங்கும் விமர்சனம்... அடுத்தடுத்து சொல்வதெல்லாம் நியதிக்குட்படாத (Logic) மொக்கைத் தகவல்கள். ரஜினியின் நடிப்பையும், தீபிகாவின் அழகையும் பாராட்ட முடியாதாம் ஏனென்றால் அவர்கள் நடிக்கவில்லை... அவர்கள் நடிப்பை அனிமேஷன் பொறியாளர்கள் தான் பதிவுசெய்திருக்கிறார்கள் என்கிறார்கள். இது சலனப்பதிவாக்க நுட்பத்தில் வெளிவந்த திரைப்படம் என்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள் போல... இப்படத்தில் பொம்மைகளை வரைகலைஞர்கள் அனிமேஷன் செய்யவில்லை - உண்மையாக நடிக்க வைத்து அதன் தகவலின் அடிப்படையிலேயே அனிமேஷன் கதாபாத்திரங்கள் உதட்டசைவு, கண்ணசைவு, இடுப்பசைவு, விரலசைவு ஏன் போர்க்களத்தில் போர் புரிபவர்களின் தொடை, வாள்வீசும் கரங்கள் உட்பட சூழலுக்கேற்ப உணர்வுகளைக் கொட்டுகின்றன என்பது விகடனுக்கு ஏன் விளங்காமல் போனதோ...
இதில் பாடல் காட்சிகள் அதிகம் தான். ஆனால், அது தான் இப்படத்திற்கு அழகே. அத்தனை பாடல்களும் படமாக்கப்பட்ட விதம் அவ்வளவு அருமை. ஒரு விமர்சகர் இதை கொண்டாடியிருக்கவேண்டும் விகடனோ... 'வீல்...' என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ரஜினி, தீபிகா தவிர நாசர், சரத்குமார், ஜாக்கிசெராப், ஆதி ஆகியோரை குரலைக் கொண்டு தான் யூகிக்க வேண்டியிருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். சனங்களே நினைத்தாலும் அவ்வாறாகவெல்லாம் குரலை வைத்து மட்டுமே யூகித்திருக்க முடியாது. காரணம் - இதில் நீங்கள் குறிப்பிட்ட ஜாக்கிசெராப், ஆதி ஆகியோரின் குரலெல்லாம் தமிழக மக்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லை விமர்சகரே... சோட்டாபீமையும், கோச்சடையானையும் நீங்கள் ஒப்பீடு செய்வீர்களானால், உங்களை விட மடத்தனமான விமர்சனத்தை இங்கே எவருமே செய்யமாட்டார்கள். மற்றபடி நீங்கள் சொல்கிற ஒரு சில குறைகள் ஏற்க வேண்டியது தான் என்றாலும், அவையெல்லாம் பெரும்பாலான அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமாக இடம்பெறுகிற அதே கண்ணுக்கு எளிதில் புலப்படாத குறைகள் தான்.
ரஜினியின் மிடுக்கையும், தீபிகாவின் நடனத்தையும், சரத்குமாரின் திருமண நிகழ்வுகளில் மெய்மறக்க வைக்கும் காட்சிகளையும், பிரம்மாண்டமான பிரம்மிப்பூட்டும் போர்க்காட்சிகளையும் அப்படியெல்லாம் போகிற போக்கில் 'பிளாஸ்டிக் எக்ஸ்பிரஸன்கள்' - என்று சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது விகடன் விமர்சகரே...
ஹாலிவுட் திரைப்படத்தோடு ஒப்பிடுபவர்களுக்காக...
உலகின் முதல் சலனப் பதிவாக்கத் தொழில்நுட்பத் திரைப்படம் - போலார் எக்ஸ்பிரஸ் - ஹாலிவுட் படம் தான். ஆனால் கோச்சடையானுக்கு சொல்லப்படும் நியாயமான நியதிக்குட்பட்ட குறைகள் யாவும் பணத்தைக் கொட்டியிறைத்து படமாக்கப்பட்ட இந்த ஹாலிவுட் படத்திற்கும் பொருந்தும்.
சிலர் ஆங்கிலப் படம் அவதாரோடு ஒப்பிடுகிறார்கள். நியதியோடு பாருங்கள். அவதார் சலனப் பதிவாக்கத்தில் உருவான படம் தான். ஆனால், அதற்கான கதை - நிகழ் உலக இயல்புகளுக்கு நடுவே வரைகலை கதாபாத்திரங்கள் உலவும் சூழலுக்கானது. கோச்சடையான் முழுக்க முழுக்க 3D அனிமேஷன் கதைக்களம் கொண்டது. எனவே ஒப்பீடே தவறு தான். இருந்தாலும் மேலும் சில புட்டு... புட்டு... என்னவென்றால்... ஹாலிவுட் கேமரூனுக்கு எத்தனை கோடிகளையும் கொட்டிக்கொடுக்க உலகம் தயார். அவரின் பெரிய கனவை நனவாக்க பெரு முதலீடுகளை கொட்டிக்குவிக்க நிறுவனங்கள் தயார். ஆனால், இங்கே அப்படியா... இங்குள்ளவர்களுக்கும் உலக கனவுகள் உண்டு. ஆனால், நிதி நெருக்கடிக்கு ஆட்பட்டு தான் அவை வரையரைக்குள் வந்துவிடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால், கோச்சடையான் இத்தகைய இக்கட்டில் எத்தனை பெரிய கனவுகளைக் கண்முன் கொண்டுவந்து விரித்து விருந்து படைத்திருக்கிறது என்கிற அருமை நமக்கு நனிவிளங்கும்.
எத்தனை பெரிய திறமையாளர்கள் கிடைத்தாலும், அதைக் கொண்டு கோச்சடையானைப் போன்ற படைப்பை உருவாக்கும் துணிவுள்ளவர்கள் குறைவு என்று முன்பு சொல்லியிருந்தேன். அது எவ்வளவு உண்மையோ... அதே அளவு உண்மை... கேமரூனுக்குக் கிடைத்ததைப் போன்ற பணமுதலைகள் கிடைப்பார்களேயானால் தமிழிலும் அவதாரை விட மிகப்பெரிய அளவில் மாபெரும் கேன்வாஸோடு பிரம்மாண்டங்களை நிகழ்த்திக்காட்டும் துணிவுள்ளவர்கள் உண்டு என்பதும், அதில் சௌந்தர்யா ரஜினி குறிப்பிடத்தக்கவர் என்பதும். காரணம் அந்த நம்பிக்கையை கோச்சடையானக் கொண்டு வென்றெடுத்திருக்கிறார்கள்.
  • உலகில் முதன்முதலாக முழுநீள அனிமேஷன் திரைப்பட கேரக்டர்கள் சுத்தத் தமிழ் பேசுகின்றன.
  • தமிழ் மன்னர்களின் கதையும், வாழ்வியலும், வீரமும் மெய்சிலிர்க்க திரைப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • இனி ரஜினி எந்த நிலையில் இருந்தாலும் அவரின் மிடுக்கு சற்றும் குறையாமல் அவரையே படமாக்க முடியும். காரணம் அவரின் இயல்புகள் பதிவாக்கப்பட்டுவிட்டன.
  • அஜித்துக்குள் ரஜினியின் ஆன்மா புகுந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திப்பார்க்கும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டோம். (இது உதாரணம் மட்டுமே)
  • உலக சினிமாக்களுக்கு சவால் விடும் திறமையாளர்களை கொண்டிருக்கிறோம் என்பதை சரித்திரத்தில் இன்னுமொருமுறை பதிவுசெய்திருக்கிறோம்.
இவையெல்லாம் நாம் வெற்றிக்களிப்போடு கொண்டாடவேண்டிய காரணங்கள்.
தயவு செய்து குழந்தைகளோடு இப்படத்தைத் திரையரங்கில் முடிந்தால் 3D தொழில்நுட்பத்தில் கண்டுகளியுங்கள். பரவசமூட்டும் அனுபவத்தை மெய்சிலிர்க்கப் பெறுங்கள். அனுவத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள். நீங்கள் கொடுக்கும் கட்டணத்திற்கு மனம் நிறைய, நிறைய, பரவசத்தில் மூழ்கடிக்கும் அற்புத் திரைப்படத்தைக் கண்டுகளிப்பீர்கள் என்பது தான் நியாமான உண்மை என்பதால் திரையில் விரியும் மிகப்பிரம்மாண்டமான தமிழுலகம் உங்களுக்கு வியப்பளிக்கக் காத்திருக்கிறது. தவறாமல் சென்று அனுபவித்து மகிழுங்கள். வாழ்த்துக்கள்!
பரவசத்துடன்,
தமிழ் வசந்தன்

Saturday, April 12, 2014

ஊடக அறத்தைக் கற்பழிக்கும் ஊடகங்கள் - திட்டமிட்டு முடக்கப்படும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி

மான் கராத்தே இரவுக்காட்சி சென்றிருந்தேன். படம் அருமை.
என்னவென்றே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் மீது ஊடகங்கள் பொறிந்து தள்ளின.
சிவகார்த்திகேயன் யாரையும் சட்டைசெய்வதில்லை.
எவரையும் மதிக்காமல் நடந்துகொள்கிறார்.
மான் கராத்தே படம் சொதப்பல்.
வந்த இரண்டே நாட்களில் வெற்றி விழா கொண்டாடிவிட்டார்கள்.
ஆனால், வசூலாகவில்லை.
எல்லா திரையரங்குகளிலும் படத்தைத் தூக்கிவிட்டு,
நான் சிவப்பு மனிதன் - விஷால் படத்தைத் திரையிடுகிறார்கள்.
படத்திற்கு வெற்றி விழா கண்டது பொருளற்றுப்போனது.
படம் வசூல் இல்லை.
என்று ஏகத்துக்கும் மீடியாக்கள் அலறுகின்றன.
இந்தியாவின் வெகுசன ஊடகங்களின் கருத்துக்கள் என்றுமே பொய்யானதாகத்தான் இருக்கின்றன.
இவர்களாக யாரையாவது தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களுக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்று திறமையே இல்லாதவர்களை
ஏதோ ஒரு நல்லகாரியம் செய்துவிட்டாரென்று
ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவார்கள்.
திடீரென்று என்ன வருமோ தெரியாது... வளர்ந்து வரும் முயற்சியாளர்கள்
ஓரிரு வெற்றி கண்டவுடன் வளர்ச்சி பிடிக்காமல்
ஏகத்துக்கும் அளந்து தள்ளுவார்கள்.
இந்த வெட்கங்கெட்ட மூடர்களுக்குத் தேவை பரபரப்பு.
அதற்குப் பின்னால் முடக்கப்படும் உண்மையான திறமையாளர்கள்,
அவர்களின் உழைப்பு, அபார முயற்சி.. என்று எதைப் பற்றியுமே
இந்த மனிதமற்றவர்கள் கவலை கொள்வதே இல்லை.
ஒருவனை விமர்சித்து விமர்சித்தே அவனை இல்லாதவனாய் மாற்றி
வியாபாரப் பரபரப்புக்காக கூசாமல் பொய் எழுதிப் பழகிப்போனார்கள்.
நடிகர் மோகன் தொடங்கி இன்றைய ஆம்ஆத்மி கெஜ்ரிவால் வரை இவர்களின் சூத்திரம் இது தான்.
தெரிய வேண்டிய உண்மைகளை ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்தார் போல புறக்கணிப்பார்கள். இருட்டடிப்பு செய்வார்கள்.
மாணவர்கள் போராட்டம் முதல் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வரை நடைபெறும் ஊடக நயவஞ்சக அரசியல் இதுதான்.
ஊரைப் பற்ற வைத்து அதில் குளிர்காய்கிற அயோக்கியர்களின் ஊடகங்களாய் (ஒரு சில தவிர) இவைகள் இருப்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.
ஊழல்களை மறைப்பது, ஒரே நேரத்தில் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி திரும்பத் திரும்ப நையாண்டி செய்தே அவரின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்துவது,
நாட்டுக்காகப் போராடினவர்களை ஏதோ ஒரு மூளையில் சிறிய கட்டத்தில் பத்தோடு பதினொன்றாகச் செய்திப்படுத்துவது,
நடிகர் நடிகைகள் அந்தரங்கங்களை வெகுசன பரபரப்புக்குள்ளாகும் விதத்தில் முகம்சுளிக்கும் அளவுக்கு விமர்சிப்பது,
என்று இவர்களின் அட்டூழியத்துக்கு பாழாகிப்போனவர்கள் எக்கச்சக்கமானவர்கள்.
என்றுமே ஏமாளியாய் அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி
விவாதித்து, விமர்சித்து, சண்டைபோட்டு அடித்துக்கொண்டு, உணர்ச்சிவயத்திற்குள்ளாகி வீணாய்ப்போகிறவர்கள் மக்கள் தான்.
சிவகார்த்திகேயனையும், விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டு பக்கம் பக்கமாய் கட்டுரை வடித்தார்கள்.
விஜய் சேதுபதியே அப்படி ஒன்றும் இல்லை. இங்கே பல திறமையாளர்கள் இருக்கிறார்கள். மறுபடியும் யாரோ இருவரை மட்டும்
புகழ்ந்தும், இகழ்ந்தும் செய்தி வெளியிடுவதை விட்டுவிட்டு எல்லோரைப் பற்றியும் எழுதுங்கள் என்று மனம் திறந்து சொன்ன போதும்
இவர்கள் திருந்தவே இல்லை. காரணம் அப்படியெல்லாம் திருந்திவிட்டால் இவர்கள் கல்லா கட்ட முடியாதே...
இவர்களின் எண்ணம் போலவே...
விஜய் சேதுபதிக்கு என்று ஒரு சாரார் திரள ஆரம்பித்து சிவகார்த்திகேயனை வசைமொழியத் துவங்கினார்கள்.
சிவகார்த்திகேயனை ஆதரிப்பவர்கள் விஜய் சேதுபதியை வசைமொழியத்துவங்கினார்கள்.
வியாபாரமானது. கல்லா கட்டினார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் படங்கள் மிதமான வெற்றியைத் தர,
சிவகார்த்திகேயனின் வெகுசன வெற்றி இவர்களைத் திக்குமுக்காடச் செய்தது.
காழ்ப்புணர்வு பீடித்த பேனாவை வழக்கம் போல விளம்பரம் தேடப் பயன்படுத்தத் துவங்கியவர்கள்...
சிவகார்த்திகேயனை கிழி... கிழி... கிழி... அவதூறு மேல் அவதூறு...
அதில் எதுவுமே நம்பும்படியாக இல்லை...
சிவகார்த்திகேயனே பல நேரங்களில் விஜய் டிவியில் விளக்கம் சொல்ல நேர்ந்தது.
பிறகு ஒரு நேரத்தில் அதை நிறுத்திக்கொண்டு பட வேளைகளில் மும்முரமானவருக்கு அடுத்தடுத்து முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வுகள் நிகழத்துவங்கின. திரைச் சந்தையில் விஜய், அஜித், சூர்யா இவர்களுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் தான் வசூலில் சாதனை படைத்திருக்கிறார் என்ற செய்தி அவரின் சந்தை மதிப்பை உயர்த்திக்காட்டியது. மான் கராத்தே - படம். ஹன்சிகா ஜோடி என்றதும் பரபரப்புக்கள் பற்றிக்கொள்ளத் துவங்கின. திரைநாயகிகளை பகடைகளாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களின் பணத்தில் படமெடுத்து, பிறகு கைவிட்டுவிடுவதில் கில்லாடியான சிலம்பரசன் - தனுஷ் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயனுக்கு சொடி என்றதும் ஹன்சிகாவின் காதலை முறித்துக்கொண்டார் என்ற செய்தியில் பக்கம்பக்கமாக வலைபூ எழுத்தாளர்கள் வரை அலறத்துடித்தார்கள். சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட் பெருநாயகர்களின் படங்களுக்கு இணையாக செலவிடப்படுவதில் துவங்கி, படத்திற்கு அதிக அளவிலான பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதுவரை அத்தனையும் சாதனை செய்திகளாகவே இருந்தது சிவகார்த்திகேயனுக்கு. வளர்ச்சி முகத்தில் கொடிகட்டிப் பறந்த சிவகார்த்திகேயன் நோக்கி இவர்கள் எழுதிய எல்லாப் புரளிகளுக்கும் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட வளர்ச்சிக் காரணிகள் சம்மட்டி அடி கொடுத்தன.
சில தமிழ் ஆர்வலர்கள் படத்தில் திருக்குறளை கேலி செய்திருக்கிறார்கள் என்று கூவினார்கள். அதை இந்தப்படத்தில் மட்டுமா செய்தார்கள். தமிழை எல்லாப் படங்களிலும் கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் தன்னைத் தமிழார்வளனாய் காட்டிக்கொண்டு, சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைத் தடுப்பதாகவே இருக்கிறது. தமிழ் கேலிப்பொருளாகும் எல்லா இடங்களிலும் இவர்கள் எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருப்பதால் இதைச் சொல்லி படத்தை முடக்கவேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் தமிழார்வலர்களாக இருந்தால் - தமிழ் சீரழிக்கப்படும் அத்தனை சங்கதிகளுக்காகவும் இவர்கள் குரல் கொடுத்து அப்படியானவற்றை முடக்கிக்காட்டியவர்களாக இருக்க வேண்டும். பிறகு மான் கராத்தே படத்தை திரையிடுவதை நிறுத்தலாம். இவர்களைப் போன்ற போலிகளால் உண்மையான தமிழார்வலர்கள் கூட ஐயப்பாட்டுக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள்.
ஒரு சிறுவன் ஒரு வெகுசன தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருந்து மக்களைப் பரவச வெள்ளத்தில் ஆழ்த்திக்காட்டியிருக்கிறார். அத்தனை நிகழ்ச்சிகளும் சிவகார்த்திகேயன் என்ற ஒற்றை மனிதனுக்காகவே மக்களால் ரசிக்கப்பட்டது. அவரின் துடுக்குத்தனமான பேச்சுக்களுக்காகவே அத்தனை நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் பன்மடங்கு கூடி பிரபலமடைந்தது. தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளராக வருவதற்கு ஒரு சிறுவனால் இயலுமென்றால் அது அந்தச் சிறுவனின் ஆகப்பெரும் உழைப்பு. உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர் முதல் நேற்று முளைத்த மொக்கை ஹீரோக்கள் வரை அனைவரும் சொல்லிக்கொண்டார்கள். உண்மையிலேயே 'உங்கள் வீட்டுப் பிள்ளை' - என்கிற வாசகம் பொருந்துமென்றால் அது சிவகார்த்திகேயனின் மாயாஜாலமல்ல. அவரின் சமயோசித புத்தியும், நேரத்திற்கு அடிக்கும் நகைச்சுவை நையாண்டிகளும் தான். இத்தனை சாதுர்யமாக ஒரு இளைஞன் மக்களை வயிறு வலிக்கச் சிரிக்கவைத்தால் யாருக்குத் தான் இவரைப் பிடிக்காமல் இருக்கும்.... இந்த வெற்றி முழுக்க முழுக்க சிவகார்த்திகேயனின் சொத்து. அவரது திறமைக்குக் கிடைத்த பலன். திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கோடானுகோடி ரசிகர்களின் இதயங்களை வென்றெடுத்தவன் அந்த இளைஞன் - சிவகார்த்திகேயன். திறமை அவன் ரத்தத்தில் இருப்பதால் எத்தகைய எதிர்வீச்சையும் மக்களின் அபிமானத்தால் இந்த மனிதனால் வென்றெடுக்க முடியும்.
சிவகார்த்திகேயன் பக்கம் இருக்கும் நியாயத்தையும், அவரின் திறமையையும் எடுத்துக்கூறுவதற்காக இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை... அதையும் தாண்டி இந்திய ஊடகங்களின் போக்கு எத்தகைய பாதகமான சூழலில் மக்களை வைத்திருக்க முயல்கின்றன என்பதையும், மக்களை எப்போதும் பதற்றமுள்ளவர்களாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் நயவஞ்சகமான சூழ்ச்சி அரசியலையும் சாடவே எழுதப்பட்டது. இதுபோன்ற அபாண்டமான விமர்சனங்களால் இந்தியஊடகங்கள் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் சிதைக்கிறார்கள். பல இளைஞர்களின் பெருமுயற்சிகளை நசுக்குகிறார்கள். இவர்கள் நிகழும் அரசியல் சூழ்ச்சிகளை இத்தகைய மாற்று விமர்சனப் போக்கால் வெளிப்படுத்தவிடாமல் மட்டுப்டுத்துவதோடு, திசைதிருப்பி மக்களின் அரசியல் எண்ணங்களை மலுங்கடிக்க சிவகார்த்திகேயன் போன்றவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அசுர நஞ்சாற்றில் சிக்கி சின்னாபின்னமாகிறவர்கள் உண்டு. சிலர் அதில் தப்பிப் பிழைக்கிறார்கள். சிலர் திறமையிருந்தும் இவர்களை எதிர்கொள்ள முடியாமல் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்டுகிறார்கள். நிகழ்ந்த பல சம்பவங்களைப் போலவே மொத்த வெகுசன ஊடகங்களாலும் வியாபாரத்திற்க்காகச் செய்யப்பட்ட பரபரப்பில் ஒரு சிறு பகுதி தான் சிவகார்த்திகேயன் என்கிற இளைஞனின் மீதான ஊடகங்களின் ஒட்டுமொத்தத் தூற்றல்,
ஊடகங்கள் நினைத்தால் எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்கிற திமிர் இவர்களுக்கு நல்லதல்ல. அதை கெட்டவர்களிடம் காண்பித்தால் மக்கள் பயனடைவார்கள். கூடங்குளம் முதல் மீத்தேன் குழாய்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனைவரை அனைத்து மக்கள் நலன் சார்ந்த சங்கதிகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, இதுபோன்ற கேளிக்கை செய்திகளைப் பரப்பி மக்களை திசைதிருப்பும் மலிவான அரசியலை முன்னெடுக்கும் ஊடக அராசகம் நிகழ்கிறது. நல்லவர்களைக் கூட ஊடகப் பரபரப்புக்காக நடுத்தெருவில் இவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். புரளி சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் பேரரரசியல் சூழ்ச்சிகளை புலப்படுத்துவதே இல்லை. பன்னாட்டு வணிகத்திலிருந்து, விளைநிலங்களாகும் விவசாயம் வரை இவர்களால் சொல்லத் தகுந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதே கிடையாது. பெரும்பாலும் இந்த நயவஞ்சகத்தை மக்களின் மீதே திணிக்கிறார்கள்.
வெகுசன ஊடகங்களுக்கு பணம் கரந்துவிட்டால் போதும்... அரசியல் கட்சிகளை நோக்கி அவர்களின் பேனா முனை திரும்பிவிடுகிறது. காசுகொடுக்கும் கட்சிகளுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். எத்தகைய நேர்மையானவர்களையும் இவர்கள் ஈவிறக்கமின்றி காவுவாங்குவார்கள். கேலிக்கைச் சித்திரம் என்ற பெயரிலும், நையாண்டி என்கிற பெயரிலும் அவர்களின் புகழை இழிவுபடுத்தி நாசமாக்குவார்கள். இவர்களின் கொடுக்கைப் பிடுங்கி எறிய வேண்டும். நல்ல நோக்கமுள்ள செய்தியாளர்கள் பிறக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ஒரு ஊடக அறம் இருந்தது.
ஊடகத்திற்கு என்று ஒரு கொள்கை இருக்கும்.
அதைத் தலையங்கத்தில் மட்டுமே வெளிப்படுத்தும் அந்த ஊடகம்.
மற்றபடி கொள்கைக்கு மாற்றாக இருந்தாலும் அந்தச் செய்தி திரிக்கப்படாமல் வெளியிடப்படும்.
செய்திகளைச் செய்திகளாகவும் - தலையங்கத்தில் கொள்கையையும் வைத்து நடுநிலைமையோடு வெளிவந்த நாளிதழ்கள் இருந்தன.
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வெள்ளைக்காரர்களையும், ஆட்சியாளர்களையும் பகைத்துக்கொண்டு சுதேசமித்திரன், நம்நாடு இதழ்கள் வெளிவந்த காலம் உண்டு.
இதனால் பல ஆசிரியர்கள் தலைமறைவாக இருந்து செய்தி சேகரித்தார்கள். பல இடங்களில் இதழ்கள் மறைமுகமாக விற்கப்பட்டன. பல எழுத்தாளர்களும், நேர்மையான ஊடகவியலாளர்களும் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாகி ஏதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று மாண்டிருக்கிறார்கள். லாபநோக்கமின்றி கொள்கைக்காகவே இயங்கிய வைராக்கியமுள்ள இதழ்கள் வெளிவந்து அரசியல் புரட்சிகள் நிகழ்ந்த வரலாறு உண்டு.
இப்போது இதற்கெல்லாம் நேர்மாறாகவே இந்தியாவின் ஊடக உலகம் அலறுகிறது.
ஊடக அறம் பலாத்காரம் செய்யப்படுகிறது. இது தேசத்திற்கு நலம் சேர்ப்பதல்ல. மாறாக நாட்டையே துண்டுதுண்டாக்கும்.
மக்களை வெள்ளந்திரிகளாக வைத்திருக்கும். புதிய அரசியலை முடக்கும். புரட்சிகளை மட்டுப்படுத்தும்.
சமூக சிந்தனையாளர்களைச் சந்தியில் நிறுத்தும்.
மனிதநேயத்திற்குப் பாடுபடுபவர்களின் முகத்தில் காசுக்காகச் சேற்றை வாரிப் பூசும்.
மனிதத்தைக் கொன்று, அறத்தைக் கொன்று, அன்பின் ஆணிவேரையே அறுத்தெறியும் நஞ்சை நிரப்பி கட்டுரை வடிக்கும் பேனா முனைகளால் நாம் பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் காவுவாங்கப்படுவோம்.
என்ன செய்யப்போகிறோம்...?


ஊடகத்திமிருக்கு எதிரான ஆற்றான்மையுடன்,
- தமிழ் வசந்தன்

Tuesday, March 18, 2014

என்ன ஆகும் எதிர்காலம்... அச்சுறுத்தும் அகண்ட பார்வை

விளைநிலங்களை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதன் விளைவு - மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயங்கள் பாழ்படும். விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலைக்குச் செல்லப் பாருங்கள் என்று நாட்டின் பிரதம அமைச்சரே வாய்மொழிந்தபடி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மீத்தேன் எரிவாயுக் குழாய்களை நிறுவ ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் - விவரமறியாத ஏழை விவசாயிகளுக்கு பணத்தாசை ஊட்டி, டெல்டா நிலங்களை வளைத்துக்கொண்டு குழாய் பதிப்பார்கள். அவர்களைக் கொண்டே காய் நகர்த்தி எஞ்சியிருப்பவர்களிடமும் நிலத்தை அபகரித்துக்கொண்டு சொந்த நிலத்தில் கம்பீரமாக வாழ்ந்தவர்களை ஊரைவிட்டே வெளியேறும்படிச் செய்துவிட்டு, அத்தனை நிலப்பகுதிகளிலும் அசுரத்தனமாக மீத்தேன் குழாய் அமைத்து விளை நிலங்களை வீண் நிலங்களாக்கிவிட்டுவார்கள். வேலை முடிந்ததும் தரிசு நிலத்தையும் தோண்டி சுரங்கம் அமைத்து நாட்டை கோரவேட்டை ஆடுவார்கள்.

இதிலும் எஞ்சிய நிலங்களை பெருவணிக நிறுவனங்கள் கையகப்படுத்தும். அதில் அமைச்சர் வீரப்ப மொய்லி அனுமதித்த படி அந்நிய மரபணு மாற்ற விதைகளை விதைத்து விதைகளற்ற உணவுகளைத் தயார் செய்யும். அந்த விவசாயத்திற்கு அந்தந்த நிலத்தின் சொந்தக்காரர்களையும், விவசாயிகளையுமே அடிமைக் கூலிகளாக்கிக் கொள்ளும். சொந்த நிலத்தின் அகதிகளாக விவசாயிகள் மாறுவார்கள். விளைவிக்கப்படும் மரபணு மாற்ற விதைகளின் பூக்களில் மகரந்தங்கள் காணக்கிடைக்காது. விதைகளற்ற விளைச்சல்களை உண்பவர்களின் ஆண்மை பறிபோகும். வளரும் நாடுகளை குறிவைக்கும் வளர்ந்த நாடுகளின் நயவஞ்சகத்திற்கு சொந்த நாட்டின் சுயநலத் தலைவர்களின் நம்பிக்கை வார்த்தைகளில் மயங்கிப்போனவர்கள், வெளிநாட்டு உணவுகளின் மோகத்தில் திளைத்து மோசமாகிப்போவார்கள். மிதவேகத்தில் அந்நிய அபிவிருத்திகள் இந்தியர்களைச் செயலற்றவர்களாக்கும். இராணுவத்திற்கு ஆள் தேரமாட்டார்கள். வீரர்கள் உருவாக முடியாத மலட்டு நாடாக இந்தியா மாறும். அந்நியக் குளிர்பானங்களில் கலக்கப்படும் மிதவேக நஞ்சுக்களை, விளம்பர நடிகர்களின் மோகத்தில் குடிக்கப்பழகிப் போனவர்களுக்கு மூளை வேலைசெய்யாது. மந்த நிலையில் வருங்காலத் தூண்களான இளைய சமுதாயம் முடங்கிப் போய்க்கிடக்கும்.

கட்டற்ற நிலையில் தெருவெங்கும் கொடி கட்டிப் பறக்கும் மதுபானக் கடைகளில் பள்ளிச் சிறார் முதல் பற்களற்ற கிழவர் வரை கும்பலாக நின்று பட்டப் பகலில் குடிக்கச் செல்லும் கலாசாரம் பரவிவிட்டதன் விளைவு, குடும்பங்களுக்குள் சச்சரவுகள் பெரிதாகும். அதிகமான விவாகரத்துகள் நிகழும். குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் கூட்டம் குவியும். அநாதைகள் அதிகரிப்பார்கள். பல குடும்பத்தலைவிகளின் தாலி பறிபோகும். கணவனற்ற பெண்கள் வாழ்க்கைச் சுழலில் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். குழந்தைகள் சிறுவயதில் குறுக்குவழிகளைப் பின்பற்றத்துவங்குவார்கள். சமூகவிரோதிகளின் எண்ணிக்கை கூடும். வழிப்பறி அதிகரிக்கும். சோம்பிக்களைப் (Zombie) போல சைக்கோக்கள் வீடெங்கும் நிறைவார்கள். இளம்பெண்கள் குடிகாரர்களின் காம வேட்கைக்குப் பலவந்தப்படுத்தப்படுவார்கள். கற்பிற்சிறந்த நாடு கற்பிழந்து சீரழியும். விபத்துக்கள் எண்ணிலடங்காது. முடமான சமூகமாய் முழுநாடும் திரியும். மழைநீர் சேகரிக்காமை, நீர்நிலைகள் தூர்வாரப்படாது போதல், நிலத்தடிநீரை அசுரத்தனமாக ஆழ்துளைக் குழாய்களில் உறிஞ்சி எடுத்தல் போன்ற காரணங்களால் அருகிவிடும் தண்ணீரால் மக்கள் பேரவதிக்குள்ளாவார்கள். விளைநிலங்களில் அசுரத்தனமாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் அருகிவிடும் நிலத்தடி நீர் கிடைக்காமல் விவசாயம் செய்பவர்கள் மறுபடியும் எலிக்கறி உண்டு உயிர்வலிப்பாட்டை (Survival) எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆட்பட்டு மறித்துப்போகவேண்டிவரும். மாபெரும் பஞ்சம் மொத்த தேசத்தையும் மறுபடியும் சூழும். அதன் கோரப் பிடியில் சிக்குண்டவர்கள் மீளமுடியாமல் மறித்துப்போவார்கள். தேசம் வெப்பக்காடாகும். மக்கள் சொந்த நிலத்தை, தேசத்தை விட்டு பல திசைகளுக்குக் குடிபெயர்வார்கள். இயலாதவர்கள் சோறு தண்ணீரின்றி என்புதோல் போர்த்த உடம்பாய் உலவுவார்கள். பிணந்தின்னிக் கழுகள் இறக்கும் தருவாயில் உயிர்மட்டும் கொண்டு உலவும் பிண்டங்களை கொத்தித் தின்னக் காத்திருக்கும்.

முழுமையடையாத தொழில்நுட்பத்தோடு நயமற்ற பொருட்கள் கொண்டு கட்டமைக்கப்பட்ட போதிய பாதுகாப்பற்ற அணுஉலைகளிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்படும். திடீரென்று குபீரென வெடித்துச் சிதறும் அணு உலையின் ஒரு பகுதி எல்லா திசைகளிலும் பற்றிக்கொள்ளும். புதைத்து வைக்கப்பட்ட அணுக்கழிவுகள் பீறிட்டுக் கிழம்பும். கடல்களில் மீன்கள் செத்துக் கருவாடாக மிதக்கும். அணுக்கதிர்வீச்சால் தாக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள் செத்து மடிவார்கள். சிலருக்குக் கண்கள் குருடாகும். சிலருக்கு தீராத புற்றுநோய் பீடித்துக்கொள்ளும். மண் மலடாகும். புல் பூண்டு கூட முளைவிடாது. குழந்தைகள் ஊனமுற்றுப் பிறக்கும்.

இலவசங்களுக்கும், சில ஆயிரங்களுக்கும், சாராயத்திற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு விலைமதிக்க முடியாத ஓட்டுக்களை அடமானம் வைத்தவர்களால், தலைவர்களாகும் சுயநலமிக்க அரசியல்வாதிகள் நாட்டை நாசக்காடாக்குவார்கள். எத்தனைத் திட்டங்கள் தீட்டமுடியுமோ அத்தனையையும் தீட்டி, அத்தனையிலும் கோடிகளின் கோடிகளில் கொள்ளையடிப்பார்கள். வீசும் அரசியல் பெருநெருப்பாற்றில் சமானியர்கள் சாம்பாலகுவார்கள். ஏழைகளின் வயிறு பற்றி எரியும். குடும்பம் குடும்பங்களாகத் தற்கொலைச் செய்பவர்களின் செய்திகள் செய்தித்தாட்களை அலங்கரிக்கும். மதவெறி, சாதிவெறி பீடித்தத் தலைவர்கள் மனிதகுலத்தை மோதவிட்டு குளிர்காய்வார்கள். காதலர்கள் உயிரோடு கொளுத்தப்படுவார்கள். சமத்துவம் சீர்குலையும். நல்லிணக்கம் நலிந்து போகும். ரத்த வேட்கை கொண்ட நரிகளைப் போல கொல்ல வரும் வெறியர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சாமானியர்களுக்கும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மனிதம் என்ற சொல் கெட்ட வார்த்தையாக மாறும்.

பெருவணிக நிறுவனங்களால் வீதிக்கு வந்த பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி வறுமைக்கு ஆட்படும். அதே வணிகநிறுவனங்களில் நாதியற்ற குடும்பங்களின் இளந்தலைமுறையினர் அடிமைகளாச் சேருவார்கள். புதிய தொழில் முனைவோர் முடக்கப்படுவார்கள். பணக்காரர்கள் மேன்மேலும் பணங்களைக் கொட்டிக்குவிப்பார்கள். ஏழைகள் ஏழ்மையினும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். வேலைவாய்ப்பும், தொழில் வாய்ப்பும் அருகிப்போய் விரக்தியுற்ற சமானியர்கள் பெருவணிக வளாகங்களைத் தீராக்கோபங்கொண்டு தீக்கிரையாக்குவார்கள். நாடே பற்றி எரியும்.

இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டு, ஆண்மையற்ற இளைஞர்களாக குடிமகன்கள் உருமாறி, குடும்பங்கள் சீரழிந்து, பெண்கள் பிண்டங்களாகி, அடுத்த தலைமுறையும் முடமாய்ப் பிறக்கும் தருவாயில், நாட்டை சுயநத்திற்காக நாசக்காடாக்கிவிட்ட அரசியல் தலைவர்கள் இனி இந்த நாட்டால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைக்கு செய்துவிட்ட பிறகு, இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் சூரையாடியவர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தை சேமித்து வெளிநாடுகளில் சௌகர்யமாக, சொகுசாக அடைக்கலம் புகுந்துகொள்வார்கள். மொத்தநாட்டையும் சுரண்டித்தீர்த்துவிட்டு,- வெளிநாடுகளின் பண்ணை வீடுகளில் அறுஞ்சுவை விருந்து உண்ட பிறகு - நீங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசியல் - புயல்களும், புரட்சிகளும், தூண்களும், சாணக்கியர்களும் விடும் ஏப்பம் நாம் முழுங்கப்பட்டுவிட்டோம் என்பதாக முடியும்.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே...!

-தமிழ் வசந்தன்

Sunday, October 13, 2013

எளியவர்களால் ஆனது உலகு

மோர் பாட்டி
கே.எஃப்.சி - சிக்கன் துண்டையும், மெக் டொனால்ட் பர்கரையும், டோமினோ பீட்ஸாவையும் தான் உண்பீர்களா... மோரும், சுண்டலும், வெள்ளரியும், வேகவைத்த சோளமும் உண்ணமுடியாதா...

அயல்நாட்டு பெருவணிக முதலாளிகள் விளம்பரக் கவர்ச்சியால் கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள். இதனால் உள்நாட்டுப் பொருட்களின் விலை மறைமுகமாக உயர்வதோடு, அதன் மொத்த லாபமும் அயல்நாட்டுக்குத் தாரைவார்க்கப்படுகிறது. உலகமயமாக்களின் பெருவணிக அரசியல் எளியவர்களின் கடைசி ஆதாரங்களை உறிஞ்சி, ஏழைகள் என்றும் எழவே முடியாத அளவிற்கு அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடுகின்றன. ஒரு மல்டி மால் அப்பகுதியில் இருக்கும் பத்து எளிய அண்ணாச்சி கடைகளை மூடவைத்து விடுகிறது. அப்பகுதி தெருவியாபாரிகளின், வாழ்வாதாரத்திற்காக காய்கறி விற்றுப் பிழைக்கும் எளியவர்களின் வாழ்வாதாரம் வரை அபகரித்து, அவர்களை வாழவே முடியாத நிலைக்குத் தள்ளி, அத்தனை உயிர்களின் வாழ்க்கையை சூறையாடிவிட்டு, தான் மட்டுமே ஒட்டு மொத்த லாபத்தையும் எடுத்துக்கொள்கிறது.

இவைகளை உண்பதால் உளச் சீக்கும், உடல் சீக்கும் வருவதோடு, பையிலிருக்கும் பைசாவும் கரைந்துவிடும். தெருக்களில் கூவிக்கூவி விற்கும் காய்கறி வண்டித் தாத்தாக்கள், சுண்டல் விற்கும் சிறுவர்கள், மோர் விற்கும் எளிய பாட்டிகள் - இவர்கள் கலப்படம் செய்வதில்லை. இயற்கையில் விளையும் பொருட்களை பெருலாப நோக்கமின்றி எளிய விலையிலேயே விற்கிறார்கள். இவர்களிடம் உண்பதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டுமல்ல. அவர்களின் கடைசி வாழ்வாதாரம் காக்கப் படுகிறது என்பதை மட்டும் உணர்ந்துகொள்ளுங்கள்.

மகனும், மகளும் ஏமாற்றிவிட்ட வயதான கிழவி மோர்விற்று வைராக்கியத்துடன் வாழ்ந்துவருகிறார். தாயை இழந்து குடிகாரனுக்குப் பிறந்த மகன் சுண்டல் விற்று வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறான். கணவனை இழந்த மனைவி குழந்தையை வளர்க்க வெள்ளரி விற்று பிழைத்துக்கொண்டிருக்கிறார். காசு என்கிற புள்ளியில் இவர்கள் தோற்றுவிட்டால் - ஒன்று தன்னை மாய்த்துக்கொள்வார்கள். இல்லை, தீவிரவாதிகளா உருப்பெற்றுவிடுவார்கள். அதுவும் இல்லாவிடில் இருள் உலக சமூகவிரோத ஓநாய்களின் வேட்டைக்கு ஆளாகின்ற ஆடாகிவிடுவார்கள். அவர்கள் கத்தி தூக்குவதும், துப்பாக்கி ஏந்துவதும், தன்னை மாய்த்துக் கொள்வதும், தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதும் - இந்த சமூகத்தின் கைகளில் தான் இருக்கிறது.

30 ரூபாய் lays உறைகளில் 4 துண்டு கிழங்குச் சீவல் தவிற வெறும் காற்று தான் அடைக்கப்பட்டிருக்கிறது. kurkure-வில் சேர்க்கப்படும் நச்சு - தீ வைத்தால் (பிளாஸ்டிக்) ஞெகிழியைப் போல் உருகும் என்பதை முகநூலில் படித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கோக்கும், பெப்ஸியும் நச்சுப் பொருள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது வேறு. ஆனால், குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால், இவர்கள் 5 ரூபாய்க்கு மோர் விற்று - நம் தாகம் அறிந்து இன்னும் கொஞ்சம் வேண்டுமாப்பா என்கிறார்கள் லாப நோக்கமில்லாமல்... சுண்டல் சிறுவனிடம் 'கூட ரெண்டு போடுப்பா' என்று இன்னும் கேட்டுப் பெற்றுக்கொள்கிறீர்கள். இவர்களுக்கு உங்கள் பணங்களை தாராளமாகச் செலவு செய்யுங்கள். இவர்களிடம் 30 ரூபாய் கொடுத்தால் உங்கள் குடும்பத்திற்கே தேவையான சுண்டலும், வெள்ளரியும் கிடைத்துவிடும் என்பது முக்கியமல்ல. அவர்கள் அன்றைக்கான வாழ்வாதாரத்தைப் பெற்றுவிடுவார்கள் என்பதைச் சிந்திக்க மறவாதீர்கள்.

இதையெல்லாம் காட்டிலும், பஃபெட் சிஸ்டத்தில் முன்னமே பணம்கட்டிய உணவு டோக்கனை வைத்துக் கொண்டு பரிமாறக் ஆள் இல்லாமல் - நின்றபடியே உண்ண வைத்துவிட்டு - தண்ணீரைக் கூட காசு வாங்கிக்கொண்டு தரும் பன்னாட்டு உணவகங்களை விட, இவர்கள் மனிதர்களிடம் காட்டும் மனிதம் மகத்தானது. அதற்காகவாவது இவர்களை வலுப்படுத்த வேண்டும்.

எளியவர்கள் அன்பின் அடிமை,
-தமிழ் வசந்தன்

Monday, October 1, 2012

எது Infatuation?


இவர்கள் எதை 'Infatuation' என்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. முதல் காதலை எதிர்ப்பது இங்கே எல்லோரும் வழக்கமாகச் செய்து வருவது. அது பருவ ஈர்ப்பு, உண்மையான காதல் அல்ல என்று அதிகமாகவே புண்படுத்திவிடுகிறார்கள்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். எது உண்மையான காதலாக இருக்கும். எத்தனை ஆண்டுகள் ஆனபிறகும், முதல் காதல் தோற்று, மறு காதல் வந்து, குடும்பம், குழந்தை என்றான பிறகும்... பசுமை மாறாமல் இன்றும் அந்த முதல் காதல் பிறந்த குழந்தையைப் போல மனதில் பதிந்துகொண்டு நினைவாடுகையில் வரும் ஏக்கமும், தவிப்பும் - பருவ ஈர்ப்புதான் உங்கள் முதல் காதல் தோற்றதற்கு உண்மையான முதற் காரணமாக இருக்கிறதா? ஒரு சில சம்பவங்களை நினைக்கிற போது மனது நெகிழ்ந்து கண்ணீல் நீர் புரண்டு வழிகிறதே... அப்போதும் அது உண்மையான காதல் இல்லை தானா? இழந்தோம் என்று இதயம் துடிதுடித்து நோகிறதன் வலியை உணர்ந்த பிறகும், அது வெறும் பருவ ஈர்ப்பு மட்டுமே என்று உங்களால் ஒப்புக்கொள்ள முடிகிறதா...?

எங்கே... கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கலாம்... முதல் காதல் என்பது கிட்டத்தட்ட பள்ளிப்பருவம் நிறைவடைகிற நிலையில் பிறப்பது... கண்டிப்பாகத் எந்தத்திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக, பூ பூப்பதைப் போல மனதில் தானாய் பிறந்து, நம்முள் புகுந்து, நம்மில் நிறைவது. ஏதோ ஒரு கணத்தில் பெண்-ஆணிடமோ, ஆண்-பெண்ணிடமோ, தம் மனதைப் பறிகொடுக்கிற மாய நிகழ்வு. அழகோ, அறிவோ,கள்ளங்கபடமற்ற குழந்தைத்தன்மையோ, தெய்வீகமோ - இன்னபிற குணங்கள் எதுவாகினும் இருக்கலாம். ஆனால், அதில் திட்டமிடல் எள்ளளவும் இருக்காது.

ஆனால், பக்குவமடைந்த பிறகு வரும் காதல் (Love after mature) என்று நீங்கள் வரையறை கூறும் காதல் 20 வயதுக்கு மேல் 28 வயதிற்குள் வருவது. அந்தப் பருவம் கிட்டத்தட்ட, கல்லூரியில் பயில்வதாகவோ, வேலை தேடிக்கொண்டிருப்பதாகவோ, வேலையில் அமர்ந்தபின்னரோ இருக்கலாம். இந்த மூன்று நிலைகளிலும் என்ன காரணத்திற்காக காதல் பிறக்கலாம் என்று சிந்திக்கலாமே...

"மச்சான்... அவ செம ஃபிகர்டா.. " என்று சொல்லக் கேட்கிறோம். குறிப்பாக கல்லூரியில் பயிலும் மணமாகாத ஆண்கள் தங்கியிருக்கும் அறைகளில் கவர்ச்சிகரமான பெண்களின் சுவரொட்டிகள் இருப்பதை நீங்கள் சொல்லி அறியவேண்டியதில்லை. பெண்கள் அதிகபட்மான அழகு சாதனங்களை இந்தக் கல்லூரிப் பருவத்தில் தான் பயன்படுத்துகிறார்கள். மெரினா கடற்கறைக்குச் சென்றால் தெரியும்... இந்தப் பருவத்துக் காதலர்களின் உண்மையான நிலை என்ன என்பது... இவையெல்லாம் மறுக்கக்கூடிய காரணிகளா... ஹார்மோன்கள் அதிகமாக தன் வேலையைக் காட்டுகிற உடல்நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு வரும் காதல் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தானே இருக்க முடியும். இது தானே உண்மையான 'Infatuation'. எனினும் கல்லூரிக் காதல் முழுமையும் இப்படியானதென்று முழுமையாகக் கூறிவிடமுடியாது. காரணம் இங்கும் முதல் காதல் புனிதம் மாறாமல் பிறக்க விதகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சில வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் இதில் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தான் காதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பிறக்கிறது.

வேலை தேடுகிற பருவம்... நண்பர்கள் ஒவ்வொருவராய் நல்ல நல்ல வேலைகளில் அமர்ந்து விடுகிறார்கள்." நாம் எப்போது நல்ல பணியில் அமர்வது? தொழிலில் உயர்வது?" என்று சிந்திக்கத் துவங்குகிற போதே அங்கொருவனுக்கு திருமணமாகிவிடுகிறது. எப்படித் தொழிலில், பணியில் நன்நிலைக்கு உயரவேண்டியது சமூகம் எதிர்பார்க்கும் காரணியாக இருக்கின்றதோ... அதே போலத் தான் திருமணமும்... குறித்த வயதைக் கடந்துவிட்டால், "இன்னும் பெண் அமையவில்லையா...", "எப்போது திருமணம்... நல்ல மாப்பிள்ளையா சீக்கிரமா பாருங்க...", "பெண்களை திருமணமாகாமல் அதிக நாள் வீட்டில் வைத்திருக்கக்கூடாது..." என்று எத்தனையோ காரணங்கள். சமூகம் விடாது துரத்தும். அதன் பிடியிலிருந்து மீள்வதற்காகவாவது விரைவில் திருமணம் செய்வது கட்டாயமாகிவிடுகிறது. பார்க்கிற பெண்களெல்லாம் "யார் நமக்கு மனைவியாகப் போகிறார்கள்?" என்று எண்ணத் தூண்டுகிற வயது. "தனக்கு எப்பேர்ப்பட்ட கணவர் அமையவிருக்கிறோரோ?" என்ற கனவைத் தூண்டுகிற நிலை. "சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணாப்பார்த்து கட்டிவைங்கப்பா... பையன் தான் நல்ல வேலைல இருக்கான்ல..." என்று சிபாரிசுகளும் கூட வரும். "உனக்குப் பொண்ணு எப்படிப்பா வேணும்? இப்பவே சொல்லிரு... உனக்கு எப்படி வேணுமோ, அப்படியே பார்த்திருவோம்... அப்பறம், நாங்க கட்டாயப்படுத்தினதால தான் கட்டிக்கிடேன்னெல்லாம் சொல்லக்கூடாது" என்று கேட்டுவிட்டால் போதும்... வரிசையாக ஒரு பெரிய பட்டியலே வாசிப்பார்கள்... ஆக, இதில் எங்கே காதல் இருக்கிறது! முக்காலும் இந்தப்பருவத்திற்கும் - காதலுக்கும் சம்மந்தமே இல்லை. காரணம்... வீட்டில் பார்க்கும் திருமணம் என்கிற திட்டத்திற்குப் பெரும்பாலும் அவர்களே முழுமையாக மனதைக் கட்டமைத்துக்கொண்டிருப்பார்கள். முழுக்க திட்டமிட்டு, எழுதி வைத்த இலக்கணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப மாப்பிள்ளையோ, பெண்ணோ பார்த்து, அதில் பல அமைந்து, சில அமையாமல்... "சரி பரவாயில்லை... சகித்துக்கொள்ள முடியும்" என்று அவர்களே மனதைத் தேற்றிக்கொண்டு பந்தத்தைத் துவங்குகிறார்கள்.

ஆனால், பணிபுரியும் இடங்களிலோ, வேலை தேடுகிற போராட்டத்தின் போதோ நம் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டு நம்மைப் புரிந்து கொள்கிற நபர்களின் மீது நமக்கு உண்மையான காதல் மீண்டும் துளிர்விடுகிறது. நாம் இவர்களைக் கருத்தில் கொண்டாக வேண்டும். ஆனால், சமூகத் தேவைகளுக்காக அதை பெரும்பாலும் அவர்களே முறித்துவிடுகிறார்கள். "வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. இனிமே, என்ன பார்க்க வராதீங்க", "என்னன்னே தெரியல. இப்பல்லாம் ஃபோனே எடுக்க மாட்டேங்கிறான்டி" - இதெல்லாம் நாம் அன்றாடம் கேள்விப்படுகிற வலிகள் தானே. இதையெல்லாம் நீங்கள் பக்குவமடைந்த பிறகு தானே செய்கிறீர்கள். அதிக வரதட்சணை கிடைக்கிறது, டாக்டர் மாப்பிள்ளை என்று ஏதேதோ காரணங்களுக்காக உயிர்ப்புள்ள காதலை, தெரிந்தே கொலைசெய்கிற செயலை உங்கள் பக்குவம் உங்களுக்குத் தருகிறது. இது தானே பக்குமான உங்களால் காதல் அடைகிற பலன். காதலை பெற்றோர்கள் சேர்த்துவைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயல்வது... இது பக்குவமடைந்தவர் செய்கிற செயலா? உங்கள் பால்ய காதலின் போது நீங்கள் இதைத்தான் செய்தீர்களா...

உண்மையான காதல் என்ன செய்யும்... உங்களை மேம்படுத்தும்... குப்பையாய் இருந்த உங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தரும். கிழிந்த, அழுக்கான ஆடைகளை உடுத்திக்கொண்டிரு்ந்த நீங்கள், ஒரே ஒரு பார்வைக்காக உங்களையே மாற்றிக்கொள்வீர்கள். புன்னகைக்க வைக்கும். புத்துணர்ச்சி தரும். பொறுப்புணர்வை உரைக்கவைக்கும். முன்னைக்காட்டிலும் முன்னூறுமடங்கு வேகத்தில் உங்களை முன்னெடுத்துச் செல்லும். குதூகலத்தில் திழைக்கச் செய்யும். மனமெங்கும் மகிழ்ச்சியை நிரம்பிவழியச் செய்து, உள்ளம் முழுதும் உயிர்நிரப்பும். பொறுமை தரும். வறுமையை விஞ்சும் ஆற்றல்கொள்ள வைக்கும். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் சிரித்துக்கொண்டே உங்களால் கடந்துவிட முடியும். திறமை தரும். தீரம் தரும். வரம் தரும். வைராக்கியம் தரும்.

நீங்கள் பக்குவமடைந்த பிறகு வரும் காதல் இப்படியான ஒன்றாகத்தான் இருக்கிறதா... இவையெல்லாவற்றையும் தான் தருகிறதா... இல்லவே இல்லை. காரணம்... நீங்கள் சொல்கிற பருவத்தில் காதல் பெரும்பாலும் பொய். வருகிற ஒன்றிரண்டும் வந்தவண்ணமே வந்தவேகத்திலேயே போய்விடுகிறது... அதிலும் எத்தனை எதிர்பாப்புகள். வியாபாரங்கள். வஞ்சனைகள்.

கொஞ்சம் நினைவு கூறுங்கள்... பால்யத்தில் நீங்கள் பெற்ற காதல் எப்பேர்ப்பட்டது? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது...எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காதது... காதலுக்காக எதையும் செய்யும் துணிவைத் தருவது... ரசிக்க வைத்தது... ருசிக்க வைத்தது... சிரிக்க வைத்தது... மிதக்க வைத்தது... பண்படுத்தியது... பக்குவம் தந்தது... கண் வழியே புகுந்து, செல்களெல்லாம் சிலிர்க்கச் சிலிர்க்க ரசாயன மாற்றங்கள் செய்தது... உறங்கிக்கொண்டிருந்த உங்களை உசுப்பி, உயிருணர்த்தி, உற்றுநோக்கச் செய்தது. தடைகள் தகர்த்தது. வழிகள் தந்தது. விடியல் காட்டியது. விருந்து படைத்தது. நிறங்களை நிரப்பி நாட்களைச் செலுத்தியது. சிறகுகளைத் தந்து வானைச் சொந்தமாக்கி, உலகப்பந்தை உங்களுக்கடியில் உருளச்செய்தது. குழந்தையின் மழலையைப் போல கள்ளங்கபடமற்ற காதல் இனி்க்க இனிக்க வாழ்வை வளம் செய்தது. இதில் 'Infatuation' எங்கிருந்து வந்தது?

அவளுக்கு முடியாமல் போனால், மடியில் தாங்கி மருந்தூட்ட வேண்டும் என்று எண்ணத் தோன்றியதே... அதற்குப் பெயர் தான் உங்கள் மொழியில் 'Infatuation'-ஆ? பூரணமான முழுநிலவில் ஒளிவெள்ளத்தில் கண்ட அவள் புன்னகை முகத்தை மறக்க முடியாமல் தவிப்போமே... அதைத்தான் 'Infatuation' என்கிறீர்களோ? என்னைக் கடக்கும் விநாடிகளில் மனம் படபடத்து இதயம் விநாடிக்கு 200 முறை துடிக்குமே... ஒரு வேளை இது 'Infatuation'-ஆக இருக்கலாமோ? விளையாட்டாய்த் தட்டிவிட்ட தேனிக்கூட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொட்டிய தேனீக்களின் உயிர்வலியைப் பொறுத்துக்கொண்டு, அவளை அணுவளவும் ஆபத்தின்றி காத்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு முத்தமிட்டாளே... அப்படியானால் இது தான் 'Infatuation'-ஆக இருக்க வேண்டும்... சரிதானா? சும்மா கிடந்த என்னை, கவிஞனாக்கி, சிந்தனாவாதியாக்கி, தொழில்நுட்பத்தில் சிறந்தவனாக்கி,மூளையின் முடிச்சுகளுக்குள் அறிவை விரிவு செய்யும் கட்டளையை உட்புகுத்தி, பாறாங்கல்லைச் சிற்பமாக்கி, சிற்பத்திற்கு உயிர்தந்து உலவவிட்ட மதிநுட்பம் கற்றவளாய் இருந்தவளின் இந்த மாயத்தைத்தான் இவர்களெல்லாம் 'Infatuation' என்று கூறுகிறார்கள் போலும்.

பருவ ஈர்ப்போ, பாலியல் எண்ணமோ எள்ளவும் இதயத்தை அழுக்காக்கிடாத, அப்பழுக்கற்ற காதலய்யா அது. "சிறு வயதில் வருகிற காதலெல்லாம் 'Infatuation'" என்று ஒரே வார்த்தையில் மனசாட்சியே இல்லாமல் சொல்லிவிடுகிறீர்கள்... முதல் காதல் முறிவின் வலி இறக்கும் வரை உறுத்தக் கூடியது. அவர்கள் அவர்களாகவே சிந்தித்து செயல்பட அறிவுறுத்தி அவர்களுக்கு வாய்ப்பளித்தால் போதும்... முன்னேறுவதற்கு அவர்களிடத்தில் காதல் இருக்கிறது. சாதிப்பதற்கு அவர்களுக்கு சக்தியிருக்கிறது. எல்லாம் செய்து முடித்துவிட்டு, தக்க பருவத்தில் மணம் செய்துகொள்ளட்டுமே. அவர்களை கட்டுப்படுத்தலாமே தவிர, கரம்பிரித்து, காதல் முறித்து, வறுத்தி, வலிதந்துவிடுகிறீர்களே... மூடர்களே... வாழத்தானே பிறந்தோம். இது ஏன் உங்களுக்கு கடைசிவரை புரிவதே இல்லை...? காலங்காலமாய் நீங்கள் செய்யும் கொடுமையில் எத்தனை காதல்கள் மாண்டுபோனது தெரியுமா... அத்தனையும் புனிதம்... அத்தனையும் அறிவு... அத்தனையும் உயிர்ப்புள்ள மகிழ்ச்சி... இனியாவது, எதிர்ப்பதை நிறுத்திவிட்டு, எண்ணிப்பாருங்கள்!

என்றென்றும் காதலுடன்,
-தமிழ் வசந்தன்

Tuesday, March 6, 2012

சுயநல மனிதர்களால் சீரழியும் இந்தியாஎங்கே போகிறோம்... என்ன நடக்கிறது... சுயநலம். முல்லைப் பெரியாரிலும், காவிரி நீரிலும் ஒருமைப்பாடு காணாத இந்தியா... சாதிக்கொடுமைக்கு ஒரு பரமக்குடி துப்பாக்கிச் சூடு... விழுப்புரம் இருளர் இனப்பெண்கள் நால்வரைக் கற்பழித்த காவலர்களுக்கு தண்டனை இருக்கட்டும். இந்தக்கொடூரத்தை அரங்கேற்ற எப்படித் துணிந்தார்கள்... இவர்களுக்காக ஏன் எவரும் போராடவில்லை. காலகாலமாய் நேரு வர்க்கமே நாடுளும் வறட்டு ஆளுமை... அலைக்கற்றை ஊழல்... அதர்ஷ் ஊழல்... காமன் வெல்த் ஊழல்... ஆயிரமாயிரம் கோடிகளாய் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்... சோனியாவின் முடிவுக்குக் காத்திருக்கும் மன்மோகன், மன்மோகன் முடிவுக்குக் காத்திருக்கும் மந்திரிகள்... மந்திரிகள் கையொப்பமிடக் யோசிக்கும் உத்தரவுக் கோப்புகள்... எதையும் செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் நம்பி ஏங்கி நிற்கும் இந்தியா...

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவில் குறைந்து வந்த பணத்தின் மதிப்பு, இன்னும் விரைவாக ஆண்டுக்கொருமுறை மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. போன ஆண்டில் அறிமுகமான ஒரு ரூபாய் நாணயத்தின் அளவு இந்த ஆண்டு ஐம்பது பைசா அளவிற்கு பாதியாகக் குறைகிறது என்றால், 50 விழுக்காடு இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தானே பொருள்... மலைவாசிகளுக்கு அரசு என்கிற பெயரில் இவர்கள் கொடுத்த தொல்லை, தீவிரவாதமாக மாறி, இந்தியாவுக்கு எதிராக முளைத்திருக்கிறது. இதில் அரசின் தவறு இல்லவே இல்லையா... இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று கூறும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் வீழ்ந்தால் தான் ஆட்சி நாற்காலியை பிடிக்கிறப் பேராசையோடிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏன், இந்தியாவில் முகமதியர்கள் இந்தியக்குடிமக்கள் இல்லையா... கிறத்தவர்கள் வரக்கூடாதா... எல்லோரும் சேர்ந்து தானே சுதந்திரத்திற்குப் போராடினோம். இவர்களை விட்டால் மதவாதம் என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்டி, மீதி இந்தியாவையும் ரத்தபூமியாக்கிப் பார்ப்பார்கள்.

விளைநிலங்களையும், கால்வாய்களையும், கண்மாய்களையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பல நீர்நிலைகளை அழித்துவிட்டோம். இவர்களுக்கெல்லாம் இந்தச் சீரழிவுகளைச் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் யார்... அரசின் துணையில்லாமல் தான் இவையெல்லாம் செய்யப்பட்டதா... சுயநலம். பணத்தைப் பெற்றுக்கொண்டு எத்தனை லோடு மணலை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டுபோக, இந்திய நதிகளைக் கற்பழிக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்ததன் விளைவு... 5 ஆண்டுகளுக்கு முன் வயல்வெளியாக இருந்த இடங்களிலெல்லாம் கட்டிட நெருக்கடிகள்... இந்திய அளவில் கடும் விலையேற்றம்... உலக வங்கி தந்த பல்லாயிரம் கோடி கடன்களில் சிறிதளவைக் கூட நாம் இன்னும் கட்டி முடிக்கவில்லை. எந்தச் சுதாரிப்பும் இல்லை. நிலத்தடி நீரின் அளவு குறைந்துவருகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான கடன் இதுவரை அடைக்கப்படவில்லை.

அரசியல்வாதிகளின் சுயநலச் சதுரங்கத்தில் இந்தியா பாழாகிக்கொண்டிருக்கிறது. மத்தியில் நல்லாட்சி செய்ய தகுதியான கட்சியோ, அமைப்போ, நல்ல நபரோ இதுவரை எதுவுமில்லை. ஏற்றுமதியைவிட, இறக்குமதியை அதிகம் செய்துகொண்டிருக்கிறோம். அது தொடர்ந்தால்... வெளிநாட்டு உணவுப்பொருள் விளம்பரங்களால் பணம் பார்ப்பது மட்டுமல்ல... நமக்கே தெரியாமல் ஒவ்வொரு இந்தியனின் ஆயுளையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் மெதுவாக ஆட்கொள்ளும் நஞ்சை உணவுகளில் கலந்து விற்று, இறுதியில் பிற நாடுகள் இந்தியாவை எளிதில் கைப்பற்றிவிடும் அபாயம் இருக்கிறது. அந்த உணவுப் பொருளை எல்லாம் ஏதாவது சுயநலமுள்ள அதிகாரி பணம்பெற்றுக்கொண்டு விற்பதற்கு அனுமதி கொடுத்துவிடுவார். கவலையோ, கேள்வியோ இல்லாமல் அவையெல்லாம் நம் மூளையை பாதிப்பிற்குள்ளாக்கும். பாகிஸ்தானில் அதிக அளவில் இந்திய ரூபாயின் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு மும்பை தாதா தாவூத் மூலமாக அண்டை நாடுகளுக்குப் பிரிக்கப்பட்டு, அங்கிருந்து பல வழிகள் வழியாக இந்தியா வந்து, கைமாற்றப்படுவதாக சமீபத்தில் செய்தி வந்தது. பாகிஸ்தானின் அடுத்த இலக்கு இந்தியாவிற்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவது தான். ஆனால், சுயநலமிக்க அதிகாரிகளை, சுயநலமிக்க அரசுகள் சுதந்திரமாக விட்டுவிட்டதன் விளைவால் இந்தியா இன்னொரு பஞ்சத்தை விரைவில் எதிர்கொள்ளும். ஆம், அரிசி, நீர், பெட்ரோல் இல்லாமல், சுயநலமிகளால் பிற நாடுகளின் நயவஞ்சகத்திற்கு ஆளானால் நாம் பஞ்சத்தைத் தான் சந்தித்தாக வேண்டும்.

2012ல் உலகம் அழியுமா தெரியாது... ஆனால், நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பஞ்சம் பசி தரும். உணவு இருக்காது. தாகம் உயிர் கொல்லும். பணத்தையும், தங்கத்தையும் நாம் உண்ண முடியாது. பழி வெறுப்பைத் தரும். அன்று சுயநலமிகளால் சீரழிக்கப்பட்டதன் வலியை உணர்வோம். வறுமை போராடக் கற்றுத் தரும். போர் புரட்சி செய்யும். வரலாறு உருவாகும். அன்று தான் தீண்டாமையும், அதிகார மமதையும் வேரோடு அறுந்து, மனிதத்தை நேசிக்க முடியும். மனிதனை மதிக்கக் கற்றுக்கொள்வோம். இதை உணர்ந்தவர்களில் சில சமானியர்கள் தீவரிவாதிகளாக இல்லை. ஆனால், தவிப்புள்ள தீவிமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் நானும், உணர்கையில் நீங்களும் ஒருவர்...

கனன்றெரியும் இந்தியன்
-தமிழ் வசந்தன்