இவர்கள் எதை 'Infatuation' என்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. முதல் காதலை எதிர்ப்பது இங்கே எல்லோரும் வழக்கமாகச் செய்து வருவது. அது பருவ ஈர்ப்பு, உண்மையான காதல் அல்ல என்று அதிகமாகவே புண்படுத்திவிடுகிறார்கள்.
நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். எது உண்மையான காதலாக இருக்கும். எத்தனை ஆண்டுகள் ஆனபிறகும், முதல் காதல் தோற்று, மறு காதல் வந்து, குடும்பம், குழந்தை என்றான பிறகும்... பசுமை மாறாமல் இன்றும் அந்த முதல் காதல் பிறந்த குழந்தையைப் போல மனதில் பதிந்துகொண்டு நினைவாடுகையில் வரும் ஏக்கமும், தவிப்பும் - பருவ ஈர்ப்புதான் உங்கள் முதல் காதல் தோற்றதற்கு உண்மையான முதற் காரணமாக இருக்கிறதா? ஒரு சில சம்பவங்களை நினைக்கிற போது மனது நெகிழ்ந்து கண்ணீல் நீர் புரண்டு வழிகிறதே... அப்போதும் அது உண்மையான காதல் இல்லை தானா? இழந்தோம் என்று இதயம் துடிதுடித்து நோகிறதன் வலியை உணர்ந்த பிறகும், அது வெறும் பருவ ஈர்ப்பு மட்டுமே என்று உங்களால் ஒப்புக்கொள்ள முடிகிறதா...?
எங்கே... கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கலாம்... முதல் காதல் என்பது கிட்டத்தட்ட பள்ளிப்பருவம் நிறைவடைகிற நிலையில் பிறப்பது... கண்டிப்பாகத் எந்தத்திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக, பூ பூப்பதைப் போல மனதில் தானாய் பிறந்து, நம்முள் புகுந்து, நம்மில் நிறைவது. ஏதோ ஒரு கணத்தில் பெண்-ஆணிடமோ, ஆண்-பெண்ணிடமோ, தம் மனதைப் பறிகொடுக்கிற மாய நிகழ்வு. அழகோ, அறிவோ,கள்ளங்கபடமற்ற குழந்தைத்தன்மையோ, தெய்வீகமோ - இன்னபிற குணங்கள் எதுவாகினும் இருக்கலாம். ஆனால், அதில் திட்டமிடல் எள்ளளவும் இருக்காது.
ஆனால், பக்குவமடைந்த பிறகு வரும் காதல் (Love after mature) என்று நீங்கள் வரையறை கூறும் காதல் 20 வயதுக்கு மேல் 28 வயதிற்குள் வருவது. அந்தப் பருவம் கிட்டத்தட்ட, கல்லூரியில் பயில்வதாகவோ, வேலை தேடிக்கொண்டிருப்பதாகவோ, வேலையில் அமர்ந்தபின்னரோ இருக்கலாம். இந்த மூன்று நிலைகளிலும் என்ன காரணத்திற்காக காதல் பிறக்கலாம் என்று சிந்திக்கலாமே...
"மச்சான்... அவ செம ஃபிகர்டா.. " என்று சொல்லக் கேட்கிறோம். குறிப்பாக கல்லூரியில் பயிலும் மணமாகாத ஆண்கள் தங்கியிருக்கும் அறைகளில் கவர்ச்சிகரமான பெண்களின் சுவரொட்டிகள் இருப்பதை நீங்கள் சொல்லி அறியவேண்டியதில்லை. பெண்கள் அதிகபட்மான அழகு சாதனங்களை இந்தக் கல்லூரிப் பருவத்தில் தான் பயன்படுத்துகிறார்கள். மெரினா கடற்கறைக்குச் சென்றால் தெரியும்... இந்தப் பருவத்துக் காதலர்களின் உண்மையான நிலை என்ன என்பது... இவையெல்லாம் மறுக்கக்கூடிய காரணிகளா... ஹார்மோன்கள் அதிகமாக தன் வேலையைக் காட்டுகிற உடல்நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு வரும் காதல் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தானே இருக்க முடியும். இது தானே உண்மையான 'Infatuation'. எனினும் கல்லூரிக் காதல் முழுமையும் இப்படியானதென்று முழுமையாகக் கூறிவிடமுடியாது. காரணம் இங்கும் முதல் காதல் புனிதம் மாறாமல் பிறக்க விதகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சில வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் இதில் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தான் காதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பிறக்கிறது.
வேலை தேடுகிற பருவம்... நண்பர்கள் ஒவ்வொருவராய் நல்ல நல்ல வேலைகளில் அமர்ந்து விடுகிறார்கள்." நாம் எப்போது நல்ல பணியில் அமர்வது? தொழிலில் உயர்வது?" என்று சிந்திக்கத் துவங்குகிற போதே அங்கொருவனுக்கு திருமணமாகிவிடுகிறது. எப்படித் தொழிலில், பணியில் நன்நிலைக்கு உயரவேண்டியது சமூகம் எதிர்பார்க்கும் காரணியாக இருக்கின்றதோ... அதே போலத் தான் திருமணமும்... குறித்த வயதைக் கடந்துவிட்டால், "இன்னும் பெண் அமையவில்லையா...", "எப்போது திருமணம்... நல்ல மாப்பிள்ளையா சீக்கிரமா பாருங்க...", "பெண்களை திருமணமாகாமல் அதிக நாள் வீட்டில் வைத்திருக்கக்கூடாது..." என்று எத்தனையோ காரணங்கள். சமூகம் விடாது துரத்தும். அதன் பிடியிலிருந்து மீள்வதற்காகவாவது விரைவில் திருமணம் செய்வது கட்டாயமாகிவிடுகிறது. பார்க்கிற பெண்களெல்லாம் "யார் நமக்கு மனைவியாகப் போகிறார்கள்?" என்று எண்ணத் தூண்டுகிற வயது. "தனக்கு எப்பேர்ப்பட்ட கணவர் அமையவிருக்கிறோரோ?" என்ற கனவைத் தூண்டுகிற நிலை. "சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணாப்பார்த்து கட்டிவைங்கப்பா... பையன் தான் நல்ல வேலைல இருக்கான்ல..." என்று சிபாரிசுகளும் கூட வரும். "உனக்குப் பொண்ணு எப்படிப்பா வேணும்? இப்பவே சொல்லிரு... உனக்கு எப்படி வேணுமோ, அப்படியே பார்த்திருவோம்... அப்பறம், நாங்க கட்டாயப்படுத்தினதால தான் கட்டிக்கிடேன்னெல்லாம் சொல்லக்கூடாது" என்று கேட்டுவிட்டால் போதும்... வரிசையாக ஒரு பெரிய பட்டியலே வாசிப்பார்கள்... ஆக, இதில் எங்கே காதல் இருக்கிறது! முக்காலும் இந்தப்பருவத்திற்கும் - காதலுக்கும் சம்மந்தமே இல்லை. காரணம்... வீட்டில் பார்க்கும் திருமணம் என்கிற திட்டத்திற்குப் பெரும்பாலும் அவர்களே முழுமையாக மனதைக் கட்டமைத்துக்கொண்டிருப்பார்கள். முழுக்க திட்டமிட்டு, எழுதி வைத்த இலக்கணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப மாப்பிள்ளையோ, பெண்ணோ பார்த்து, அதில் பல அமைந்து, சில அமையாமல்... "சரி பரவாயில்லை... சகித்துக்கொள்ள முடியும்" என்று அவர்களே மனதைத் தேற்றிக்கொண்டு பந்தத்தைத் துவங்குகிறார்கள்.
ஆனால், பணிபுரியும் இடங்களிலோ, வேலை தேடுகிற போராட்டத்தின் போதோ நம் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டு நம்மைப் புரிந்து கொள்கிற நபர்களின் மீது நமக்கு உண்மையான காதல் மீண்டும் துளிர்விடுகிறது. நாம் இவர்களைக் கருத்தில் கொண்டாக வேண்டும். ஆனால், சமூகத் தேவைகளுக்காக அதை பெரும்பாலும் அவர்களே முறித்துவிடுகிறார்கள். "வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. இனிமே, என்ன பார்க்க வராதீங்க", "என்னன்னே தெரியல. இப்பல்லாம் ஃபோனே எடுக்க மாட்டேங்கிறான்டி" - இதெல்லாம் நாம் அன்றாடம் கேள்விப்படுகிற வலிகள் தானே. இதையெல்லாம் நீங்கள் பக்குவமடைந்த பிறகு தானே செய்கிறீர்கள். அதிக வரதட்சணை கிடைக்கிறது, டாக்டர் மாப்பிள்ளை என்று ஏதேதோ காரணங்களுக்காக உயிர்ப்புள்ள காதலை, தெரிந்தே கொலைசெய்கிற செயலை உங்கள் பக்குவம் உங்களுக்குத் தருகிறது. இது தானே பக்குமான உங்களால் காதல் அடைகிற பலன். காதலை பெற்றோர்கள் சேர்த்துவைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயல்வது... இது பக்குவமடைந்தவர் செய்கிற செயலா? உங்கள் பால்ய காதலின் போது நீங்கள் இதைத்தான் செய்தீர்களா...
உண்மையான காதல் என்ன செய்யும்... உங்களை மேம்படுத்தும்... குப்பையாய் இருந்த உங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தரும். கிழிந்த, அழுக்கான ஆடைகளை உடுத்திக்கொண்டிரு்ந்த நீங்கள், ஒரே ஒரு பார்வைக்காக உங்களையே மாற்றிக்கொள்வீர்கள். புன்னகைக்க வைக்கும். புத்துணர்ச்சி தரும். பொறுப்புணர்வை உரைக்கவைக்கும். முன்னைக்காட்டிலும் முன்னூறுமடங்கு வேகத்தில் உங்களை முன்னெடுத்துச் செல்லும். குதூகலத்தில் திழைக்கச் செய்யும். மனமெங்கும் மகிழ்ச்சியை நிரம்பிவழியச் செய்து, உள்ளம் முழுதும் உயிர்நிரப்பும். பொறுமை தரும். வறுமையை விஞ்சும் ஆற்றல்கொள்ள வைக்கும். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் சிரித்துக்கொண்டே உங்களால் கடந்துவிட முடியும். திறமை தரும். தீரம் தரும். வரம் தரும். வைராக்கியம் தரும்.
நீங்கள் பக்குவமடைந்த பிறகு வரும் காதல் இப்படியான ஒன்றாகத்தான் இருக்கிறதா... இவையெல்லாவற்றையும் தான் தருகிறதா... இல்லவே இல்லை. காரணம்... நீங்கள் சொல்கிற பருவத்தில் காதல் பெரும்பாலும் பொய். வருகிற ஒன்றிரண்டும் வந்தவண்ணமே வந்தவேகத்திலேயே போய்விடுகிறது... அதிலும் எத்தனை எதிர்பாப்புகள். வியாபாரங்கள். வஞ்சனைகள்.
கொஞ்சம் நினைவு கூறுங்கள்... பால்யத்தில் நீங்கள் பெற்ற காதல் எப்பேர்ப்பட்டது? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது...எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காதது... காதலுக்காக எதையும் செய்யும் துணிவைத் தருவது... ரசிக்க வைத்தது... ருசிக்க வைத்தது... சிரிக்க வைத்தது... மிதக்க வைத்தது... பண்படுத்தியது... பக்குவம் தந்தது... கண் வழியே புகுந்து, செல்களெல்லாம் சிலிர்க்கச் சிலிர்க்க ரசாயன மாற்றங்கள் செய்தது... உறங்கிக்கொண்டிருந்த உங்களை உசுப்பி, உயிருணர்த்தி, உற்றுநோக்கச் செய்தது. தடைகள் தகர்த்தது. வழிகள் தந்தது. விடியல் காட்டியது. விருந்து படைத்தது. நிறங்களை நிரப்பி நாட்களைச் செலுத்தியது. சிறகுகளைத் தந்து வானைச் சொந்தமாக்கி, உலகப்பந்தை உங்களுக்கடியில் உருளச்செய்தது. குழந்தையின் மழலையைப் போல கள்ளங்கபடமற்ற காதல் இனி்க்க இனிக்க வாழ்வை வளம் செய்தது. இதில் 'Infatuation' எங்கிருந்து வந்தது?
அவளுக்கு முடியாமல் போனால், மடியில் தாங்கி மருந்தூட்ட வேண்டும் என்று எண்ணத் தோன்றியதே... அதற்குப் பெயர் தான் உங்கள் மொழியில் 'Infatuation'-ஆ? பூரணமான முழுநிலவில் ஒளிவெள்ளத்தில் கண்ட அவள் புன்னகை முகத்தை மறக்க முடியாமல் தவிப்போமே... அதைத்தான் 'Infatuation' என்கிறீர்களோ? என்னைக் கடக்கும் விநாடிகளில் மனம் படபடத்து இதயம் விநாடிக்கு 200 முறை துடிக்குமே... ஒரு வேளை இது 'Infatuation'-ஆக இருக்கலாமோ? விளையாட்டாய்த் தட்டிவிட்ட தேனிக்கூட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொட்டிய தேனீக்களின் உயிர்வலியைப் பொறுத்துக்கொண்டு, அவளை அணுவளவும் ஆபத்தின்றி காத்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு முத்தமிட்டாளே... அப்படியானால் இது தான் 'Infatuation'-ஆக இருக்க வேண்டும்... சரிதானா? சும்மா கிடந்த என்னை, கவிஞனாக்கி, சிந்தனாவாதியாக்கி, தொழில்நுட்பத்தில் சிறந்தவனாக்கி,மூளையின் முடிச்சுகளுக்குள் அறிவை விரிவு செய்யும் கட்டளையை உட்புகுத்தி, பாறாங்கல்லைச் சிற்பமாக்கி, சிற்பத்திற்கு உயிர்தந்து உலவவிட்ட மதிநுட்பம் கற்றவளாய் இருந்தவளின் இந்த மாயத்தைத்தான் இவர்களெல்லாம் 'Infatuation' என்று கூறுகிறார்கள் போலும்.
பருவ ஈர்ப்போ, பாலியல் எண்ணமோ எள்ளவும் இதயத்தை அழுக்காக்கிடாத, அப்பழுக்கற்ற காதலய்யா அது. "சிறு வயதில் வருகிற காதலெல்லாம் 'Infatuation'" என்று ஒரே வார்த்தையில் மனசாட்சியே இல்லாமல் சொல்லிவிடுகிறீர்கள்... முதல் காதல் முறிவின் வலி இறக்கும் வரை உறுத்தக் கூடியது. அவர்கள் அவர்களாகவே சிந்தித்து செயல்பட அறிவுறுத்தி அவர்களுக்கு வாய்ப்பளித்தால் போதும்... முன்னேறுவதற்கு அவர்களிடத்தில் காதல் இருக்கிறது. சாதிப்பதற்கு அவர்களுக்கு சக்தியிருக்கிறது. எல்லாம் செய்து முடித்துவிட்டு, தக்க பருவத்தில் மணம் செய்துகொள்ளட்டுமே. அவர்களை கட்டுப்படுத்தலாமே தவிர, கரம்பிரித்து, காதல் முறித்து, வறுத்தி, வலிதந்துவிடுகிறீர்களே... மூடர்களே... வாழத்தானே பிறந்தோம். இது ஏன் உங்களுக்கு கடைசிவரை புரிவதே இல்லை...? காலங்காலமாய் நீங்கள் செய்யும் கொடுமையில் எத்தனை காதல்கள் மாண்டுபோனது தெரியுமா... அத்தனையும் புனிதம்... அத்தனையும் அறிவு... அத்தனையும் உயிர்ப்புள்ள மகிழ்ச்சி... இனியாவது, எதிர்ப்பதை நிறுத்திவிட்டு, எண்ணிப்பாருங்கள்!
என்றென்றும் காதலுடன்,
-தமிழ் வசந்தன்
-தமிழ் வசந்தன்