அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Sunday, October 13, 2013

எளியவர்களால் ஆனது உலகு

மோர் பாட்டி
கே.எஃப்.சி - சிக்கன் துண்டையும், மெக் டொனால்ட் பர்கரையும், டோமினோ பீட்ஸாவையும் தான் உண்பீர்களா... மோரும், சுண்டலும், வெள்ளரியும், வேகவைத்த சோளமும் உண்ணமுடியாதா...

அயல்நாட்டு பெருவணிக முதலாளிகள் விளம்பரக் கவர்ச்சியால் கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள். இதனால் உள்நாட்டுப் பொருட்களின் விலை மறைமுகமாக உயர்வதோடு, அதன் மொத்த லாபமும் அயல்நாட்டுக்குத் தாரைவார்க்கப்படுகிறது. உலகமயமாக்களின் பெருவணிக அரசியல் எளியவர்களின் கடைசி ஆதாரங்களை உறிஞ்சி, ஏழைகள் என்றும் எழவே முடியாத அளவிற்கு அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடுகின்றன. ஒரு மல்டி மால் அப்பகுதியில் இருக்கும் பத்து எளிய அண்ணாச்சி கடைகளை மூடவைத்து விடுகிறது. அப்பகுதி தெருவியாபாரிகளின், வாழ்வாதாரத்திற்காக காய்கறி விற்றுப் பிழைக்கும் எளியவர்களின் வாழ்வாதாரம் வரை அபகரித்து, அவர்களை வாழவே முடியாத நிலைக்குத் தள்ளி, அத்தனை உயிர்களின் வாழ்க்கையை சூறையாடிவிட்டு, தான் மட்டுமே ஒட்டு மொத்த லாபத்தையும் எடுத்துக்கொள்கிறது.

இவைகளை உண்பதால் உளச் சீக்கும், உடல் சீக்கும் வருவதோடு, பையிலிருக்கும் பைசாவும் கரைந்துவிடும். தெருக்களில் கூவிக்கூவி விற்கும் காய்கறி வண்டித் தாத்தாக்கள், சுண்டல் விற்கும் சிறுவர்கள், மோர் விற்கும் எளிய பாட்டிகள் - இவர்கள் கலப்படம் செய்வதில்லை. இயற்கையில் விளையும் பொருட்களை பெருலாப நோக்கமின்றி எளிய விலையிலேயே விற்கிறார்கள். இவர்களிடம் உண்பதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டுமல்ல. அவர்களின் கடைசி வாழ்வாதாரம் காக்கப் படுகிறது என்பதை மட்டும் உணர்ந்துகொள்ளுங்கள்.

மகனும், மகளும் ஏமாற்றிவிட்ட வயதான கிழவி மோர்விற்று வைராக்கியத்துடன் வாழ்ந்துவருகிறார். தாயை இழந்து குடிகாரனுக்குப் பிறந்த மகன் சுண்டல் விற்று வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறான். கணவனை இழந்த மனைவி குழந்தையை வளர்க்க வெள்ளரி விற்று பிழைத்துக்கொண்டிருக்கிறார். காசு என்கிற புள்ளியில் இவர்கள் தோற்றுவிட்டால் - ஒன்று தன்னை மாய்த்துக்கொள்வார்கள். இல்லை, தீவிரவாதிகளா உருப்பெற்றுவிடுவார்கள். அதுவும் இல்லாவிடில் இருள் உலக சமூகவிரோத ஓநாய்களின் வேட்டைக்கு ஆளாகின்ற ஆடாகிவிடுவார்கள். அவர்கள் கத்தி தூக்குவதும், துப்பாக்கி ஏந்துவதும், தன்னை மாய்த்துக் கொள்வதும், தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதும் - இந்த சமூகத்தின் கைகளில் தான் இருக்கிறது.

30 ரூபாய் lays உறைகளில் 4 துண்டு கிழங்குச் சீவல் தவிற வெறும் காற்று தான் அடைக்கப்பட்டிருக்கிறது. kurkure-வில் சேர்க்கப்படும் நச்சு - தீ வைத்தால் (பிளாஸ்டிக்) ஞெகிழியைப் போல் உருகும் என்பதை முகநூலில் படித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கோக்கும், பெப்ஸியும் நச்சுப் பொருள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது வேறு. ஆனால், குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால், இவர்கள் 5 ரூபாய்க்கு மோர் விற்று - நம் தாகம் அறிந்து இன்னும் கொஞ்சம் வேண்டுமாப்பா என்கிறார்கள் லாப நோக்கமில்லாமல்... சுண்டல் சிறுவனிடம் 'கூட ரெண்டு போடுப்பா' என்று இன்னும் கேட்டுப் பெற்றுக்கொள்கிறீர்கள். இவர்களுக்கு உங்கள் பணங்களை தாராளமாகச் செலவு செய்யுங்கள். இவர்களிடம் 30 ரூபாய் கொடுத்தால் உங்கள் குடும்பத்திற்கே தேவையான சுண்டலும், வெள்ளரியும் கிடைத்துவிடும் என்பது முக்கியமல்ல. அவர்கள் அன்றைக்கான வாழ்வாதாரத்தைப் பெற்றுவிடுவார்கள் என்பதைச் சிந்திக்க மறவாதீர்கள்.

இதையெல்லாம் காட்டிலும், பஃபெட் சிஸ்டத்தில் முன்னமே பணம்கட்டிய உணவு டோக்கனை வைத்துக் கொண்டு பரிமாறக் ஆள் இல்லாமல் - நின்றபடியே உண்ண வைத்துவிட்டு - தண்ணீரைக் கூட காசு வாங்கிக்கொண்டு தரும் பன்னாட்டு உணவகங்களை விட, இவர்கள் மனிதர்களிடம் காட்டும் மனிதம் மகத்தானது. அதற்காகவாவது இவர்களை வலுப்படுத்த வேண்டும்.

எளியவர்கள் அன்பின் அடிமை,
-தமிழ் வசந்தன்