விளைநிலங்களை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதன் விளைவு - மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயங்கள் பாழ்படும். விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலைக்குச் செல்லப் பாருங்கள் என்று நாட்டின் பிரதம அமைச்சரே வாய்மொழிந்தபடி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மீத்தேன் எரிவாயுக் குழாய்களை நிறுவ ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் - விவரமறியாத ஏழை விவசாயிகளுக்கு பணத்தாசை ஊட்டி, டெல்டா நிலங்களை வளைத்துக்கொண்டு குழாய் பதிப்பார்கள். அவர்களைக் கொண்டே காய் நகர்த்தி எஞ்சியிருப்பவர்களிடமும் நிலத்தை அபகரித்துக்கொண்டு சொந்த நிலத்தில் கம்பீரமாக வாழ்ந்தவர்களை ஊரைவிட்டே வெளியேறும்படிச் செய்துவிட்டு, அத்தனை நிலப்பகுதிகளிலும் அசுரத்தனமாக மீத்தேன் குழாய் அமைத்து விளை நிலங்களை வீண் நிலங்களாக்கிவிட்டுவார்கள். வேலை முடிந்ததும் தரிசு நிலத்தையும் தோண்டி சுரங்கம் அமைத்து நாட்டை கோரவேட்டை ஆடுவார்கள்.
இதிலும் எஞ்சிய நிலங்களை பெருவணிக நிறுவனங்கள் கையகப்படுத்தும். அதில் அமைச்சர் வீரப்ப மொய்லி அனுமதித்த படி அந்நிய மரபணு மாற்ற விதைகளை விதைத்து விதைகளற்ற உணவுகளைத் தயார் செய்யும். அந்த விவசாயத்திற்கு அந்தந்த நிலத்தின் சொந்தக்காரர்களையும், விவசாயிகளையுமே அடிமைக் கூலிகளாக்கிக் கொள்ளும். சொந்த நிலத்தின் அகதிகளாக விவசாயிகள் மாறுவார்கள். விளைவிக்கப்படும் மரபணு மாற்ற விதைகளின் பூக்களில் மகரந்தங்கள் காணக்கிடைக்காது. விதைகளற்ற விளைச்சல்களை உண்பவர்களின் ஆண்மை பறிபோகும். வளரும் நாடுகளை குறிவைக்கும் வளர்ந்த நாடுகளின் நயவஞ்சகத்திற்கு சொந்த நாட்டின் சுயநலத் தலைவர்களின் நம்பிக்கை வார்த்தைகளில் மயங்கிப்போனவர்கள், வெளிநாட்டு உணவுகளின் மோகத்தில் திளைத்து மோசமாகிப்போவார்கள். மிதவேகத்தில் அந்நிய அபிவிருத்திகள் இந்தியர்களைச் செயலற்றவர்களாக்கும். இராணுவத்திற்கு ஆள் தேரமாட்டார்கள். வீரர்கள் உருவாக முடியாத மலட்டு நாடாக இந்தியா மாறும். அந்நியக் குளிர்பானங்களில் கலக்கப்படும் மிதவேக நஞ்சுக்களை, விளம்பர நடிகர்களின் மோகத்தில் குடிக்கப்பழகிப் போனவர்களுக்கு மூளை வேலைசெய்யாது. மந்த நிலையில் வருங்காலத் தூண்களான இளைய சமுதாயம் முடங்கிப் போய்க்கிடக்கும்.
கட்டற்ற நிலையில் தெருவெங்கும் கொடி கட்டிப் பறக்கும் மதுபானக் கடைகளில் பள்ளிச் சிறார் முதல் பற்களற்ற கிழவர் வரை கும்பலாக நின்று பட்டப் பகலில் குடிக்கச் செல்லும் கலாசாரம் பரவிவிட்டதன் விளைவு, குடும்பங்களுக்குள் சச்சரவுகள் பெரிதாகும். அதிகமான விவாகரத்துகள் நிகழும். குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் கூட்டம் குவியும். அநாதைகள் அதிகரிப்பார்கள். பல குடும்பத்தலைவிகளின் தாலி பறிபோகும். கணவனற்ற பெண்கள் வாழ்க்கைச் சுழலில் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். குழந்தைகள் சிறுவயதில் குறுக்குவழிகளைப் பின்பற்றத்துவங்குவார்கள். சமூகவிரோதிகளின் எண்ணிக்கை கூடும். வழிப்பறி அதிகரிக்கும். சோம்பிக்களைப் (Zombie) போல சைக்கோக்கள் வீடெங்கும் நிறைவார்கள். இளம்பெண்கள் குடிகாரர்களின் காம வேட்கைக்குப் பலவந்தப்படுத்தப்படுவார்கள். கற்பிற்சிறந்த நாடு கற்பிழந்து சீரழியும். விபத்துக்கள் எண்ணிலடங்காது. முடமான சமூகமாய் முழுநாடும் திரியும்.
மழைநீர் சேகரிக்காமை, நீர்நிலைகள் தூர்வாரப்படாது போதல், நிலத்தடிநீரை அசுரத்தனமாக ஆழ்துளைக் குழாய்களில் உறிஞ்சி எடுத்தல் போன்ற காரணங்களால் அருகிவிடும் தண்ணீரால் மக்கள் பேரவதிக்குள்ளாவார்கள். விளைநிலங்களில் அசுரத்தனமாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் அருகிவிடும் நிலத்தடி நீர் கிடைக்காமல் விவசாயம் செய்பவர்கள் மறுபடியும் எலிக்கறி உண்டு உயிர்வலிப்பாட்டை (Survival) எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆட்பட்டு மறித்துப்போகவேண்டிவரும். மாபெரும் பஞ்சம் மொத்த தேசத்தையும் மறுபடியும் சூழும். அதன் கோரப் பிடியில் சிக்குண்டவர்கள் மீளமுடியாமல் மறித்துப்போவார்கள். தேசம் வெப்பக்காடாகும். மக்கள் சொந்த நிலத்தை, தேசத்தை விட்டு பல திசைகளுக்குக் குடிபெயர்வார்கள். இயலாதவர்கள் சோறு தண்ணீரின்றி என்புதோல் போர்த்த உடம்பாய் உலவுவார்கள். பிணந்தின்னிக் கழுகள் இறக்கும் தருவாயில் உயிர்மட்டும் கொண்டு உலவும் பிண்டங்களை கொத்தித் தின்னக் காத்திருக்கும்.
முழுமையடையாத தொழில்நுட்பத்தோடு நயமற்ற பொருட்கள் கொண்டு கட்டமைக்கப்பட்ட போதிய பாதுகாப்பற்ற அணுஉலைகளிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்படும். திடீரென்று குபீரென வெடித்துச் சிதறும் அணு உலையின் ஒரு பகுதி எல்லா திசைகளிலும் பற்றிக்கொள்ளும். புதைத்து வைக்கப்பட்ட அணுக்கழிவுகள் பீறிட்டுக் கிழம்பும். கடல்களில் மீன்கள் செத்துக் கருவாடாக மிதக்கும். அணுக்கதிர்வீச்சால் தாக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள் செத்து மடிவார்கள். சிலருக்குக் கண்கள் குருடாகும். சிலருக்கு தீராத புற்றுநோய் பீடித்துக்கொள்ளும். மண் மலடாகும். புல் பூண்டு கூட முளைவிடாது. குழந்தைகள் ஊனமுற்றுப் பிறக்கும்.
இலவசங்களுக்கும், சில ஆயிரங்களுக்கும், சாராயத்திற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு விலைமதிக்க முடியாத ஓட்டுக்களை அடமானம் வைத்தவர்களால், தலைவர்களாகும் சுயநலமிக்க அரசியல்வாதிகள் நாட்டை நாசக்காடாக்குவார்கள். எத்தனைத் திட்டங்கள் தீட்டமுடியுமோ அத்தனையையும் தீட்டி, அத்தனையிலும் கோடிகளின் கோடிகளில் கொள்ளையடிப்பார்கள். வீசும் அரசியல் பெருநெருப்பாற்றில் சமானியர்கள் சாம்பாலகுவார்கள். ஏழைகளின் வயிறு பற்றி எரியும். குடும்பம் குடும்பங்களாகத் தற்கொலைச் செய்பவர்களின் செய்திகள் செய்தித்தாட்களை அலங்கரிக்கும். மதவெறி, சாதிவெறி பீடித்தத் தலைவர்கள் மனிதகுலத்தை மோதவிட்டு குளிர்காய்வார்கள். காதலர்கள் உயிரோடு கொளுத்தப்படுவார்கள். சமத்துவம் சீர்குலையும். நல்லிணக்கம் நலிந்து போகும். ரத்த வேட்கை கொண்ட நரிகளைப் போல கொல்ல வரும் வெறியர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சாமானியர்களுக்கும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மனிதம் என்ற சொல் கெட்ட வார்த்தையாக மாறும்.
பெருவணிக நிறுவனங்களால் வீதிக்கு வந்த பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி வறுமைக்கு ஆட்படும். அதே வணிகநிறுவனங்களில் நாதியற்ற குடும்பங்களின் இளந்தலைமுறையினர் அடிமைகளாச் சேருவார்கள். புதிய தொழில் முனைவோர் முடக்கப்படுவார்கள். பணக்காரர்கள் மேன்மேலும் பணங்களைக் கொட்டிக்குவிப்பார்கள். ஏழைகள் ஏழ்மையினும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். வேலைவாய்ப்பும், தொழில் வாய்ப்பும் அருகிப்போய் விரக்தியுற்ற சமானியர்கள் பெருவணிக வளாகங்களைத் தீராக்கோபங்கொண்டு தீக்கிரையாக்குவார்கள். நாடே பற்றி எரியும்.
இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டு, ஆண்மையற்ற இளைஞர்களாக குடிமகன்கள் உருமாறி, குடும்பங்கள் சீரழிந்து, பெண்கள் பிண்டங்களாகி, அடுத்த தலைமுறையும் முடமாய்ப் பிறக்கும் தருவாயில், நாட்டை சுயநத்திற்காக நாசக்காடாக்கிவிட்ட அரசியல் தலைவர்கள் இனி இந்த நாட்டால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைக்கு செய்துவிட்ட பிறகு, இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் சூரையாடியவர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தை சேமித்து வெளிநாடுகளில் சௌகர்யமாக, சொகுசாக அடைக்கலம் புகுந்துகொள்வார்கள். மொத்தநாட்டையும் சுரண்டித்தீர்த்துவிட்டு,- வெளிநாடுகளின் பண்ணை வீடுகளில் அறுஞ்சுவை விருந்து உண்ட பிறகு - நீங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசியல் - புயல்களும், புரட்சிகளும், தூண்களும், சாணக்கியர்களும் விடும் ஏப்பம் நாம் முழுங்கப்பட்டுவிட்டோம் என்பதாக முடியும். |