அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Tuesday, March 6, 2012

சுயநல மனிதர்களால் சீரழியும் இந்தியா



எங்கே போகிறோம்... என்ன நடக்கிறது... சுயநலம். முல்லைப் பெரியாரிலும், காவிரி நீரிலும் ஒருமைப்பாடு காணாத இந்தியா... சாதிக்கொடுமைக்கு ஒரு பரமக்குடி துப்பாக்கிச் சூடு... விழுப்புரம் இருளர் இனப்பெண்கள் நால்வரைக் கற்பழித்த காவலர்களுக்கு தண்டனை இருக்கட்டும். இந்தக்கொடூரத்தை அரங்கேற்ற எப்படித் துணிந்தார்கள்... இவர்களுக்காக ஏன் எவரும் போராடவில்லை. காலகாலமாய் நேரு வர்க்கமே நாடுளும் வறட்டு ஆளுமை... அலைக்கற்றை ஊழல்... அதர்ஷ் ஊழல்... காமன் வெல்த் ஊழல்... ஆயிரமாயிரம் கோடிகளாய் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்... சோனியாவின் முடிவுக்குக் காத்திருக்கும் மன்மோகன், மன்மோகன் முடிவுக்குக் காத்திருக்கும் மந்திரிகள்... மந்திரிகள் கையொப்பமிடக் யோசிக்கும் உத்தரவுக் கோப்புகள்... எதையும் செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் நம்பி ஏங்கி நிற்கும் இந்தியா...

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவில் குறைந்து வந்த பணத்தின் மதிப்பு, இன்னும் விரைவாக ஆண்டுக்கொருமுறை மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. போன ஆண்டில் அறிமுகமான ஒரு ரூபாய் நாணயத்தின் அளவு இந்த ஆண்டு ஐம்பது பைசா அளவிற்கு பாதியாகக் குறைகிறது என்றால், 50 விழுக்காடு இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தானே பொருள்... மலைவாசிகளுக்கு அரசு என்கிற பெயரில் இவர்கள் கொடுத்த தொல்லை, தீவிரவாதமாக மாறி, இந்தியாவுக்கு எதிராக முளைத்திருக்கிறது. இதில் அரசின் தவறு இல்லவே இல்லையா... இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று கூறும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் வீழ்ந்தால் தான் ஆட்சி நாற்காலியை பிடிக்கிறப் பேராசையோடிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏன், இந்தியாவில் முகமதியர்கள் இந்தியக்குடிமக்கள் இல்லையா... கிறத்தவர்கள் வரக்கூடாதா... எல்லோரும் சேர்ந்து தானே சுதந்திரத்திற்குப் போராடினோம். இவர்களை விட்டால் மதவாதம் என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்டி, மீதி இந்தியாவையும் ரத்தபூமியாக்கிப் பார்ப்பார்கள்.

விளைநிலங்களையும், கால்வாய்களையும், கண்மாய்களையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பல நீர்நிலைகளை அழித்துவிட்டோம். இவர்களுக்கெல்லாம் இந்தச் சீரழிவுகளைச் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் யார்... அரசின் துணையில்லாமல் தான் இவையெல்லாம் செய்யப்பட்டதா... சுயநலம். பணத்தைப் பெற்றுக்கொண்டு எத்தனை லோடு மணலை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டுபோக, இந்திய நதிகளைக் கற்பழிக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்ததன் விளைவு... 5 ஆண்டுகளுக்கு முன் வயல்வெளியாக இருந்த இடங்களிலெல்லாம் கட்டிட நெருக்கடிகள்... இந்திய அளவில் கடும் விலையேற்றம்... உலக வங்கி தந்த பல்லாயிரம் கோடி கடன்களில் சிறிதளவைக் கூட நாம் இன்னும் கட்டி முடிக்கவில்லை. எந்தச் சுதாரிப்பும் இல்லை. நிலத்தடி நீரின் அளவு குறைந்துவருகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான கடன் இதுவரை அடைக்கப்படவில்லை.

அரசியல்வாதிகளின் சுயநலச் சதுரங்கத்தில் இந்தியா பாழாகிக்கொண்டிருக்கிறது. மத்தியில் நல்லாட்சி செய்ய தகுதியான கட்சியோ, அமைப்போ, நல்ல நபரோ இதுவரை எதுவுமில்லை. ஏற்றுமதியைவிட, இறக்குமதியை அதிகம் செய்துகொண்டிருக்கிறோம். அது தொடர்ந்தால்... வெளிநாட்டு உணவுப்பொருள் விளம்பரங்களால் பணம் பார்ப்பது மட்டுமல்ல... நமக்கே தெரியாமல் ஒவ்வொரு இந்தியனின் ஆயுளையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் மெதுவாக ஆட்கொள்ளும் நஞ்சை உணவுகளில் கலந்து விற்று, இறுதியில் பிற நாடுகள் இந்தியாவை எளிதில் கைப்பற்றிவிடும் அபாயம் இருக்கிறது. அந்த உணவுப் பொருளை எல்லாம் ஏதாவது சுயநலமுள்ள அதிகாரி பணம்பெற்றுக்கொண்டு விற்பதற்கு அனுமதி கொடுத்துவிடுவார். கவலையோ, கேள்வியோ இல்லாமல் அவையெல்லாம் நம் மூளையை பாதிப்பிற்குள்ளாக்கும். பாகிஸ்தானில் அதிக அளவில் இந்திய ரூபாயின் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு மும்பை தாதா தாவூத் மூலமாக அண்டை நாடுகளுக்குப் பிரிக்கப்பட்டு, அங்கிருந்து பல வழிகள் வழியாக இந்தியா வந்து, கைமாற்றப்படுவதாக சமீபத்தில் செய்தி வந்தது. பாகிஸ்தானின் அடுத்த இலக்கு இந்தியாவிற்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவது தான். ஆனால், சுயநலமிக்க அதிகாரிகளை, சுயநலமிக்க அரசுகள் சுதந்திரமாக விட்டுவிட்டதன் விளைவால் இந்தியா இன்னொரு பஞ்சத்தை விரைவில் எதிர்கொள்ளும். ஆம், அரிசி, நீர், பெட்ரோல் இல்லாமல், சுயநலமிகளால் பிற நாடுகளின் நயவஞ்சகத்திற்கு ஆளானால் நாம் பஞ்சத்தைத் தான் சந்தித்தாக வேண்டும்.

2012ல் உலகம் அழியுமா தெரியாது... ஆனால், நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பஞ்சம் பசி தரும். உணவு இருக்காது. தாகம் உயிர் கொல்லும். பணத்தையும், தங்கத்தையும் நாம் உண்ண முடியாது. பழி வெறுப்பைத் தரும். அன்று சுயநலமிகளால் சீரழிக்கப்பட்டதன் வலியை உணர்வோம். வறுமை போராடக் கற்றுத் தரும். போர் புரட்சி செய்யும். வரலாறு உருவாகும். அன்று தான் தீண்டாமையும், அதிகார மமதையும் வேரோடு அறுந்து, மனிதத்தை நேசிக்க முடியும். மனிதனை மதிக்கக் கற்றுக்கொள்வோம். இதை உணர்ந்தவர்களில் சில சமானியர்கள் தீவரிவாதிகளாக இல்லை. ஆனால், தவிப்புள்ள தீவிமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் நானும், உணர்கையில் நீங்களும் ஒருவர்...

கனன்றெரியும் இந்தியன்
-தமிழ் வசந்தன்